காங்கயம் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வலியுறுத்தல்

காங்கயம் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

காங்கயம் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி வெளியிட்ட அறிக்கை:
காங்கயம் இன மாடுகள், கொங்கு நாட்டின் அடையாளமாகும். அழகான தோற்றமும், உழைக்கும் திறனும் கொண்டவை. கொங்கு மண்டல வறட்சியை, இம் மாடுகள் தாங்கக் கூடியவை. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கும் ஏற்றவை. நிலத்தை உழவு செய்ய, டிராக்டர்களும், நீரை இறைக்க மின் மோட்டாரும், போக்குவரத்துக்கு பல தரப்பட்ட வாகனங்களும் வந்துவிட்டது. இதனால், காங்கயம் இனம் முக்கியத்துவம் இழந்து போனது.
இந்த வெற்றிடத்தை, வெளிநாட்டு கலப்பின கறவை மாடுகள் பிடித்துக் கொண்டன. கலப்பின கறவை மாடுகள் தரக்கூடிய ஏ-1 பாலை விட, காங்கயம் இன கறவை பசுக்களின் ஏ-2  ரக பால் உடல் நலத்துக்கு உகந்தது. 
காலப்போக்கில், மக்கள் இதை உணர்ந்ததால் ஏ-1 ரக பால், ஒரு லிட்டர் ரூ. 40,   ஏ-2  ரக பால் ஒரு லிட்டர் ரூ.120  -க்கு விற்பனையாகிறது. 
இந்திய பாரம்பரிய மாடுகள் மதிக்கப்படுகிறது. ஆர்வமாக வளர்க்கப்படுகிறது. காங்கயம் இன மாடு, காங்கயத்தை மையமாகக் கொண்டது.  இம் மாடுகள் விரும்பி உண்ணும் கொழுக்கட்டைப் புல்லும், வெள்ளை வேலமர நெற்றும் இப் பகுதியில் அதிகமாகக் கிடைக்கிறது. தட்பவெப்ப நிலையும் ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற சாதகமான அம்சங்களைக்  கருத்தில் கொண்டு, காங்கயம் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும். அப்போதுதான்,இதன் நோக்கம் முழுமை அடையும். எதிர்பார்த்த  பலன் கிடைக்கும். அதை விடுத்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில்  அமைத்தால் பயன் அளிக்காது.  
மேலும், ஒதுக்குப் புறமாக அமைவதுடன், ஆராய்ச்சிக்கு ஏற்றதாக அமையாது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து ஆராய்ச்சி மையத்தை காங்கயம் பகுதியில் அமைக்க வேண்டும்.  இப் பிரச்னை  குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு  மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com