காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் வெட்டி 735 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி, சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில்

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் வெட்டி 735 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி, சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனமாக விளங்கி வரும் காலிங்கராயன் வாய்க்கால் லிங்கையன் என்கிற காலிங்கராயன் என்பவரால் வெட்டப்பட்டது. இந்தக் கால்வாயில் செல்லும் பாசனநீர் மூலமாக ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும். தொடர்ந்து, 10 மாதங்கள் தண்ணீர் செல்லும் இந்த வாய்க்கால் முற்றிலும் மண்ணால் கட்டப்பட்டது.
 பவானி ஆற்றிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த வாய்க்காலில் உள்ள 786 மதகுகள் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 
நெல், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்குமாறு வெட்டப்பட்டுள்ள இந்தக் கால்வாயில் எந்தப் பகுதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் தண்ணீர் செல்லும் வகையில் வெட்டப்பட்டுள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
 மேலும், நொய்யல் ஆற்றையும், அமராவதி ஆற்றையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததால் நதிகள் இணைப்புக்கு 735 ஆண்டுகளுக்கு முன்பே அச்சாரம் போடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு பாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டு 735 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னிமலை ஒன்றிய கழகச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், கழக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட கழகச் செயலாளர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பவானியில்...
பவானி, ஜன. 18: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியதோடு, வாய்க்காலில் தண்ணீர் திறந்த காலிங்கராயன் மன்னனுக்கு வியாழக்கிழமை அணைக்கட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
 ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் பவானி ஆறு கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பவானியில் தடுப்பணை கட்டி வாய்க்கால் வெட்டியதோடு பாசனப் பரப்பை அதிகரித்து விவசாயப் புரட்சிக்கு வித்திட்டவர் காலிங்கராயன். 1281-ஆம் ஆண்டு தை 5-ஆம் தேதி முதன் முதலாக வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.  இந்த நாளைக் கொண்டாடும் வகையில் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சார்பில் காலிங்கராயன் அணைக்கட்டில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்டச் செயலர் துரைராஜா தலைமையில் அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
 இதில், பவானி நகரச் செயலர் ஸ்ரீகுமார், மாவட்டத் துணைச் செயலர் தமிழ்செல்வன், ஒன்றியச் செயலர்கள் மணி, பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com