ஏற்றுமதியாளர்களுக்கான சலுகைகளை நிறுத்த முயற்சி:நாளை கலந்துரையாடல் கூட்டம்

ஏற்றுமதியாளர்களின் சலுகைகளை நிறுத்த உலக வர்த்தகக் கழகம் முயற்சிப்பதை எதிர்கொள்வது தொடர்பான

ஏற்றுமதியாளர்களின் சலுகைகளை நிறுத்த உலக வர்த்தகக் கழகம் முயற்சிப்பதை எதிர்கொள்வது தொடர்பான விசைத்தறி துணிகள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை (அக்டோபர் 15) நடைபெறுகிறது.
இதுகுறித்து, பருத்தி துணி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம் (டெக்ஸ்புரோசில்), விசைத்தறி அபிவிருத்தி, ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் (பெடெக்ஸில்) இணைந்து வெளியிட்டுள்ள தகவல்:
தற்போது விசைத்தறி துணிகள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை வரும் நிதியாண்டு (2019) முதல் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசுடன் முயற்சித்து வருகிறது. ஏற்றுமதி மூலம் கிடைக்கக் கூடிய மிகச் சொற்ப சலுகையும் பறிபோகும் நிலையில் உள்ளதால், இது சம்பந்தமாக மாற்று வழி என்ன என்பது குறித்து (டெக்ஸ்புரோசில்) பருத்தி துணி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம், மும்பை இதற்காக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனை செய்து வருகிறது. சலுகை கிடைக்கவில்லை என்றால் முறைசாரா விசைத்தறி துணி ஏற்றுமதியில் ஈடுபட்டுளோர் மிகவும் பாதிப்பு அடைவார்கள் என்ற நோக்கத்தில் விசைத்தறி அபிவிருத்தி, ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின்( பெடெக்ஸில்) நிர்வாக இயக்குநர் எஸ்.பி.வர்மா  கேட்டுக் கொண்டதன்பேரில், ஒரு  வல்லுநர் குழு ஈரோடு டெக்ஸ்வேலிக்கு வருகை தர உள்ளது.
அந்த, வல்லுநர் குழுவுடன் விசைத்தறியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், துணி பதனிடுவோர் அனைவரும் கலந்துரையாடுவதற்கு வசதியாக வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 15) பிற்பகல் 3.30 மணியளவில் ஈரோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில் உள்ள "மேப்பிள்' அரங்கில் கலந்துரையாடல், ஆலோசனை, கோரிக்கைகள் தெரிவித்தல், நெறிப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறியும் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே அக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், துணி பதனிடுவோர் பெருமளவில் கலந்துகொண்டு  தங்களுடைய கருத்துகளை வல்லுநர்களிடம் அழுத்தமாகப் பதிவு செய்து பாதிப்பிலிருந்து விடுபட ஒத்துழைப்புத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com