உதகையில் 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை: விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை

உதகையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உதகையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமென மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை, செயிண்ட் மேரீஸ் ஹில் பகுதியில் அரசு உதவி  பெறும் தனியார் பள்ளி உள்ளது.  இந்தப் பள்ளியில் காந்தல் முக்கோணம் பகுதியைச் சேர்ந்த சுமித் கிரி பைரவன் என்ற மாணவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவரது தந்தை நந்தகுமார், அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார்.
 புதன்கிழமை காலையில் வழக்கம்போல மாணவர் பைரவன் பள்ளிக்குச் சென்றுள்ளார்.  அதன்பின், அவரது தந்தை நந்தகுமார், பைரவனுக்கு மதிய உணவு எடுத்துச் சென்றபோது அந்த மாணவர் காலையில் பள்ளிக்கு  வந்த உடனே திடீரென  பள்ளியிலிருந்து வெளியேறி விட்டதாகப்  பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  
இதற்கிடையே, உதகை  படகு இல்லம் எதிரே உள்ள ஒரு வனப் பகுதியில் குறிப்பிட்ட பள்ளிச் சீருடையுடன் ஒரு மாணவர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  படகு இல்லம் பகுதியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நந்தகுமார் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அவரது மகன் பைரவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கும்,  காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதகை நகர மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக  உதகை  அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 இதற்கிடையே, புதன்கிழமை காலையில் வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற மாணவர் திடீரென  பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும்,  வீட்டுக்கு வரும் வழியில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும்  மர்மமாக இருப்பதால் அதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம்  உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com