சர்வதேச புகைப்பட தினம்: உதகையில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி, உதகையில் புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி, உதகையில் புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
 தினமணியின் சிறுவர் மணியின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட  இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பிலான இந்த புகைப்படக் கண்காட்சியின் முதல் நாளில் 5 பள்ளிகளைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான மாணவ,  மாணவியர் கண்டுகளித்தனர்.
 இந்த புகைப்படக் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை காலை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
 மாணவர்கள் தங்களது கல்விப் பருவத்திலேயே ஏதாவது ஒரு துறையில் தங்களால் இயன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை எதிர்காலத்தில் அத்திறமையே அவர்களுக்கு வாழ்வாதாரமாக மாறும். பள்ளியில் ஆசிரியர்களும்,  மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
 இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பிலான இப்புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களின் மூலம் அவர்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்வதோடு,  இயற்கையை பாதுக்காக்கும் எண்ணத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிச்சையப்பன்,  நீலகிரி மாவட்டத்துக்கான கௌரவ வன உயிரின காப்பாளர் என்.சாதிக் அலி,  உதகை வட்டார முதன்மை குரு அருட்திரு பெனடிக்ட்,  புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எல்சி பெலவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  இக்கண்காட்சியில், கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு, நீலகிரி சுற்றுச்சூழல், கானுயிர் சங்கம்,  இயற்கை, வனவிலங்கு  பாதுகாப்பு அறக்கட்டளை, நெஸ்ட் ஆகியஅமைப்புகளுடன் மதிமாறன், பிரபு உள்ளிட்ட வன விலங்கு புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களுமாக சுமார் 500 புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
 இதற்கான ஏற்பாடுகளை புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியின் தாளாளரும், தலைமையாசிரியருமான அருட்திரு அமல்ராஜ் செய்திருந்தார். இந்த புகைப்படக் கண்காட்சியை பொதுமக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com