சில்வர் ஓக் மரங்கள் வெட்டுவதைக் கண்டித்து கூடலூரில் 22-இல் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் டேன் டீ-க்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் சில்வர் ஓக் மரங்களை வெட்டும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து

நீலகிரி மாவட்டத்தில் டேன் டீ-க்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் சில்வர் ஓக் மரங்களை வெட்டும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, ஆகஸ்ட் 22-ஆம் தேதி கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 மாவட்டத்தில் டேன் டீ தேயிலைத் தோட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதைக் கண்டித்தும், நீலகிரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மசினகுடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட  திமுக செயலர் பா.மு.முபாரக் தலைமை வகித்தார்.
 இக்கூட்டத்தில், கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி, உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட திமுக துணைச் செயலர் ஜே.ரவிகுமார்,  சிபிஎம் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் என்.வாசு,  மாவட்ட சிபிஐ இணைச் செயலர் பாலகிருஷ்ணன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் சகாதேவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலர் அனீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இக்கூட்டத்தில், அரசு தேயிலைத் தோட்டங்களில் நடைபெறும் சில்வர் ஓக் மரம் வெட்டும் முயற்சியைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி கூடலூரில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் , பொதுக் கூட்டமும் நடத்த வேண்டும். மரங்களைச் சுற்றிலும் படர்ந்துள்ள குருமிளகு கொடிகள் இம்மரங்களை வெட்டும்போது பாதிக்கப்படுவதோடு, குருமிளகு விவசாயமும் அழிந்துவிடும் என்பதால் இத்திட்டத்தையே கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
 தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்துக்கு நிரந்தர நிர்வாக இயக்குநரை நியமிக்க வேண்டும். சட்டப் பேரவையில் அறிவித்தபடி டேன் டீ தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். இந்நிறுவனத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தொழிலாளர்களுக்கு பணிக் கொடைகள், பணப் பயன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வரும் சூழலில் தேயிலை வாரியம் குறைவான விலையையே மாதாமாதம் அறிவிக்கிறது. அதைவிட குறைவான விலையையே இன்ட்கோ நிர்வாகமும் வழங்குகிறது.
 எனவே, தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையையே இண்ட்கோ  நிர்வாகமும் அறிவிக்க வேண்டும். தேயிலைத் தொழிலைப் பாதுகாக்க உடனடியாக அரசு குறைந்தபட்ச விலையை அறிவிக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com