இறுதிச் சடங்கில் துயரச் சம்பவம்: முதியவரை மிதித்துக் கொன்ற யானை

கோவை மாவட்டம், வால்பாறை அருகே இறுதிச் சடங்கின்போது புகுந்த யானை முதியவரை மிதித்துக் கொன்றது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே இறுதிச் சடங்கின்போது புகுந்த யானை முதியவரை மிதித்துக் கொன்றது.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டுக்குள் ஒற்றை யானை கடந்த வாரம் புகுந்தது. இந்த யானை தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் பகல் நேரத்தில் சுற்றி வந்ததது. இதனால், அங்குள்ள பள்ளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டது. கும்கியை வரவழைத்து இந்த யானையை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கருமலை எஸ்டேட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது சடலதத்தை அடக்கம் செய்ய அவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும் சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வனத்துக்குள் இருந்து திடீரென அந்த ஒற்றை யானை அங்கு வந்தது. இதை எதிர்பாராத மக்கள் ராஜேந்திரனின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு சிதறி ஓடினர்.
அப்போது, ஓய்வுபெற்ற எஸ்டேட் தொழிலாளியான வேலுசாமியை (65) யானை மிதித்துக் கொன்றது. இதையடுத்து, மக்கள் ஒன்று சேர்ந்து அந்த யானையை விரட்டினர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ராஜேந்திரன் சடலத்தை அடக்கம் செய்யாமலும், யானை தாக்கி உயிரிழந்த வேலுசாமியின் சடலத்தை எடுக்காமலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த காவல், வனத் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை எடுக்க மாட்டோம் எனக் கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com