அங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வு: தாமதமாக வந்த அதிகாரிகளால் அவதி

அங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு பல மணிநேரம் தாமதமாக வந்த அரசு அதிகாரிகளால் குழந்தைகளுக்கு உணவுகூட கொடுக்க முடியாமல் திங்கள்கிழமை இரவு வரை சாரல் மழையில் பெண்கள் காத்திருந்தனர்.

அங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு பல மணிநேரம் தாமதமாக வந்த அரசு அதிகாரிகளால் குழந்தைகளுக்கு உணவுகூட கொடுக்க முடியாமல் திங்கள்கிழமை இரவு வரை சாரல் மழையில் பெண்கள் காத்திருந்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு குன்னூர், ஓட்டுப்பட்டரையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்  திட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மதியம் இரண்டு மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கடிதம் அனுப்பியிருந்ததால் காலை முதலே 300-க்கும் மேற்பட்ட பெண்கள்   மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காத்திருந்தனர்.  
இந்நிலையில், 2 மணிக்கு நேர்காணல் என்று அறிவித்துவிட்டு மாலை 5 மணிக்குமேல் அதிகாரிகள் வந்ததால் குழந்தைகளுக்கு உணவுகூட இல்லாமல் ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட  பல்வேறு கிராம மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மொத்தம் 260 பேரிடம் அதிகாரிகள் நேர்காணலை இரவு வரை நடத்தினர். இதில், சாரல் மழையில் நனைந்தபடியே கைக் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து,  ஒருங்கிணைந்த  குழந்தைகள்  வளர்ச்சித் திட்ட அதிகாரி சுந்தராம்பாளிடம்  கேட்டபோது, எனக்கு கைமுறிவு ஏற்பட்டதால் திருப்பூரில் இருந்து மலர்விழி என்ற அதிகாரி  நேர்காணல் நடத்தினார். ஒரேநாளில் உதகை, குன்னூர் ஆகிய இரண்டு  இடங்களிலும்   நேர்காணல் நடைபெற்றதால் குன்னூரில் நேர்காணல் நடத்த தாமதாகிவிட்டது. குன்னூரில் 5 மணிக்கு மேல்தான் நேர்காணல் நடைபெற்றது. இதில், நானும் இரவு 12 மணி வரை  பணிபுரிந்தேன் என்றார்.
இதுகுறித்து, திருப்பூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்  திட்ட அதிகாரி மலர்விழியை  தொடர்புகொள்ள முடியவில்லை.   நேர்காணலுக்கு வந்தவர்களுக்கு இரவு நேரத்தில் சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல   பேருந்து வசதி இல்லாததால், கடும் குளிரில் குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
இதுபோன்ற நேர்காணல்கள் நடத்தப்படும்போது இரண்டு நாள்களாகப் பிரித்து நடத்தினால்  இப்பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com