ஆதிவாசி கிராமத்தில் நடமாடும் சிறுத்தை: வனப் பகுதிக்குள் துரத்தக் கோரிக்கை

கோத்தகிரி அருகே தாளமுக்கை ஆதிவாசி கிராமப் பகுதியில் சுற்றி வரும்  சிறுத்தையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் துரத்த வனத் துறையினர்

கோத்தகிரி அருகே தாளமுக்கை ஆதிவாசி கிராமப் பகுதியில் சுற்றி வரும்  சிறுத்தையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் துரத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி வடக்கு வனக் கோட்டம், கோத்தகிரி வனச் சரகம், கொணவக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தாளமுக்கை ஆதிவாசி கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமம் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளதால், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் தாளமுக்கை கிராமத்தைச் சேர்ந்த காரமடை என்பவரது இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்குவிட்ட நிலையில் அவை மீண்டும் வீடு திரும்பவில்லை. அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது அங்கிருந்த புதர் அருகே பசுக்கள் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, கோத்தகிரி வனத் துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து வனத் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை தாக்கியதில் பசுக்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, பசுக்கள் அதே இடத்தில் புதைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட காரமடைக்கு வனத் துறை சார்பில், நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், தாளமுக்கு பகுதியில் சுற்றித் திரியும்  சிறுத்தையை அடர்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com