நீலகிரியில் பிளாஸ்டிக்குக்கு மாற்று: புதிய முயற்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றான பொருள்கள் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி உதகையில் வியாழக்கிழமை  நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றான பொருள்கள் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி உதகையில் வியாழக்கிழமை  நடைபெற்றது.
 இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும்,  தமிழக நகர்ப்புற நிதி உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் அரசு முதன்மைச் செயலருமான சந்திரகாந்த் பி.காம்ப்ளே முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கிவைத்தார்.
 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க பிளாஸ்டிக் பை,  தட்டு, டம்ளர், மெழுகு  பூசப்பட்ட டம்ளர் என அனைத்து பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக எத்தகைய பொருள்களை பயன்படுத்தலாம் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், உதகையைக் காப்போம் இயக்கம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாள் பசுமை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 
 இக்கண்காட்சியில் , 32 மாற்றுப் பொருள்களுக்கான தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்  பங்கேற்று, மட்கும்  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்தல்,  இயற்கை உரம் தயாரித்தல்,  சோலார் மின்சாரம்,  பயோ கேஸ் பொருள்கள்,  மறு சுழற்சிக்கான பொருள்கள்,  பயோ கேஸ் தொழில்நுட்பம்,  இயற்கை விவசாயம்,  பழங்குடியினர் கைவினைப் பொருள்கள் என பல்வேறு வகையான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
 அத்துடன் இக்கண்காட்சியில் எத்தகைய மாற்றுப் பொருள்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.  இதன் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவும், வாய்ப்புள்ளதால்  வணிகர்கள், விடுதி உரிமையாளர்கள்,  உணவகங்கள், மற்றும் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைளுக்கு  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
 இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷ்வா,  இன்கோசர்வ் நிர்வாக இயக்குநர் வினித்,  மாவட்ட  வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com