விரிவுபடுத்தப்படாத கோத்தகிரி பேருந்து நிலையம்: பொதுமக்கள் அவதி

கோத்தகிரி பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படாமல் இருப்பதால், பேருந்துகளை நிறுத்துவதற்குப் போதுமான இடவசதி இல்லாமலும், தேவையான வசதிகள் இன்றியும் பொது மக்கள் அவதிப்பட்டு

கோத்தகிரி பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படாமல் இருப்பதால், பேருந்துகளை நிறுத்துவதற்குப் போதுமான இடவசதி இல்லாமலும், தேவையான வசதிகள் இன்றியும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோத்தகிரி பேருந்து நிலையம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்த நிலையில் பேருந்து நிலையப் பகுதியில் இட நெருக்கடி பிரச்னை இல்லாமல் இருந்தது. நாளடைவில், மக்கள் தொகை அதிகரிப்பாலும், அரசுப் பேருந்துகள், சிற்றுந்துகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையிலும் பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்துக்கு எதிர்புறத்தில் இருந்த பேரூராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும், பேருந்துகளை நிறுவதற்குத் தேவையான இட வசதி இல்லாமல் உள்ளது. விரிவுபடுத்தப்பட்ட இடத்தில் தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. பேரூராட்சி நிர்வாகம் மூலமாக பேருந்து நிலையத்தில் தரைத் தளம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும்கூட, போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
பயணிகள் அமரும் இருக்கையை ஒட்டிய தடுப்புச் சுவரில் தண்ணீர் கசிந்து வருகிறது. மழை நாள்களில் தரைப் பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது. பேருந்து நிலைய மேற்கூரை மீது மண் திட்டுகள் பாறைகளுடன் உருண்டு விழும் அபாயம் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது, மண்திட்டு சரிந்துவிழுந்ததில் பேருந்து நிலைய உள் பகுதியில் பாறை உருண்டது. அந்த நேரத்தில் ஆள்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து 55 அரசுப் பேருந்து மற்றும் 15க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர உதகை , குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்தும் அரசுப் பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன.
இப்பேருந்துகளை ஒருங்கே நிறுத்த முடியாமல், உதகை, குன்னூர் பேருந்துகள் மற்றும் கக்குச்சி, திருச்சிகடி செல்லும் உள்ளூர் பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பேருந்து நிலையம் அருகே நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான நிலம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை உள்ளது. இந்த நிலத்தை பேரூராட்சி நிர்வாகம் சமன் செய்து விரிவுபடுத்தினால் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்த வாய்ப்புள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com