குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

முறையான குடிநீர் வழங்கக் கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மேல்கப்பட்டி  கிராம மக்கள்  காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

முறையான குடிநீர் வழங்கக் கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மேல்கப்பட்டி  கிராம மக்கள்  காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா  ஊராட்சிக்கு உள்பட்ட  மேல்கப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இக்கிராமத்துக்கு  2 கி.மீ. தொலைவில் உள்ள மிளிதேன் தொட்டஹல்லா பகுதியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  பழுதடைந்த குடிநீர்க்  குழாய்களை சீரமைத்து தரக் கோரி,  நெடுகுளா ஊராட்சிக்கு  மேல்கப்பட்டி  கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதைத் தொடர்ந்து,  கிராம மக்களே நிதி திரட்டி ரப்பர் குழாய்களை அமைத்தனர். இந்நிலையில்,  இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டெருமைகள் ரப்பர் குழாய்களை சேதப்படுத்துவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இந்தக் குழாய்களைச் சீரமைத்து, முறையாக குடிநீர் வழங்கக் கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்த் தலைவர் அஜ்ஜன் தலைமையில் காலிக் குடங்களுடன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன்,  காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில்,  உடைந்த குடிநீர்க் குழாய்களை உடனடியாக  மாற்றவும்,  குடிநீர்ப் பிரச்னைக்கு  நிரந்தத்   தீர்வு  ஏற்படுத்தப்படும் என  உறுதி  அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com