100 விவசாயிகளுக்கு ஆயில் என்ஜின்: ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார்

உதகையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ஆயில் என்ஜின்களை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார்.

உதகையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ஆயில் என்ஜின்களை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார்.
உதகையில், ரோஜா பூங்கா அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100 விவசாயிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆயில் என்ஜின்களை வழங்கி ஆட்சியர் பி.சங்கர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காய்கறிப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில், ரூ. 4 கோடி மானியத்தில் உயர் விளைச்சல் காய்கறி விதைகள், தேயிலை நாற்றுகள், ரூ.1.43 கோடி மானியத்தில் 1,290 ஆயில் என்ஜின்கள், ரூ.70 லட்சம் மானியத்தில் 70 பவர் டில்லர்கள், ரூ.4 லட்சம் மானியத்தில் 10 மினி டிராக்டர்கள், ரூ. 21 லட்சம் மானியத்தில் 1,300 கைத்தெளிப்பான்கள், 100 விசைத் தெளிப்பான்கள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பயிர் விளைச்சல் அதிகரித்ததோடு, கூடுதல் பரப்பளவில் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.
மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டமானது தற்போது சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இயற்கை
வேளாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, இயற்கை வேளாண்மைத் திட்டத்தை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.
நிகழாண்டில், விவசாயிகளின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 50 சதவீத மானியத்தில் 400 ஆயில் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பசுமைக்குடில் அமைத்தல், காய்கறிப் பயிர்கள், பழப் பயிர்கள் பரப்பளவு விரிவாக்கத் திட்டம், மினி டிராக்டர்கள் விநியோகம், பண்ணைக் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரத்தைப் பெருக்க உதவிட வேண்டும் என்றார் ஆட்சியர்.
தமிழக தலைமை வனப் பாதுகாவலரும், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநருமான தீபக் ஸ்ரீவத்சவா, மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com