கால்நடைகளைக் கொன்ற புலி கண்காணிப்பு கேமராவில் பதிவு

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் கால்நடைகளைக் கொன்று வரும் புலி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் கால்நடைகளைக் கொன்று வரும் புலி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டையில் உள்ள மைமூனா என்ற பெண்ணின் பசுவை புலி வியாழக்கிழமை இரவு அடித்துக் கொன்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையிடம் வலியுறுத்தினர். இந்நிலையில், அதே பகுதியில் விலங்கூர் கிராமத்தில் அந்தப் புலி கால்நடைகளைத் தாக்கிக் கொன்றதால், அதன் நடமாட்டத்தைக் கண்டறிய வனத் துறையினர் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இந்நிலையில, அதே பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை புலி கொன்றது. அதையடுத்து, பிதர்க்காடு வனச் சரக அலுவலர் மனோகரன், பசுவைக் கொன்ற பகுதியிலும் கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பசுவைக் கொன்ற அதே இடத்தில் உள்ள குட்டைக்கு வந்து புலி, தண்ணீர் குடித்துவிட்டு, உடல் வெப்பத்தைத் தணிக்க குட்டையில் படுத்துவிட்டு, ஒய்யாரமாக வெளியே வரும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதே பகுதிக்கு புலி வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் வந்து சென்றதும் கேமராவில் பதிவாகி உள்ளது. புலி ஊருக்குள் வந்து சென்றதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். புலியைக் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு அந்தப் புலியைக் கண்காணித்து, அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
குன்னூர் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்... குன்னூர் அருகே காணிக்கை ராஜ் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளின் அருகில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. மேலும், கிண்ணக்கொரை, இரியசீகை, காமராஜ் நகர், இந்திரா நகர், ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக 2 சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரத்தில் வரும் இந்த சிறுத்தைகள், கால்நடைகளைக் கொன்றுள்ளன.
இது குறித்து இப்பகுதிகளில் உள்ள பொது மக்கள் கூறுகையில், சிறுத்தைகள், மனிதர்களைத் தாக்கும் முன்பாக, வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், சுற்றித் திரியும் சிறுத்தைகளைக் கண்காணித்து வருவதாகவும், பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com