மஞ்சூர் காவல் நிலையத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் ஒத்திகை

மஞ்சூர் காவல் நிலையத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்போல் நடத்தப்பட்ட திடீர் ஒத்திகையால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

மஞ்சூர் காவல் நிலையத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்போல் நடத்தப்பட்ட திடீர் ஒத்திகையால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையை ஒட்டி அட்டப்பாடு, அகளி, முக்காலி உள்ளிட்ட பகுதிகள் கேரளப் பகுதிக்குள் அமைந்துள்ளன.  இப்பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், கேரள போலீஸாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக எல்லைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழக போலீஸார், அதிரடிப் படையினர் எல்லைப் பகுதிகளில் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக மஞ்சூர் காவல் நிலையத்தைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும், கெத்தை, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,  2 வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 12 பேர் மஞ்சூர் காவல் நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், முகமூடி அணிந்த நபர்கள் போலீஸாரை தாக்க முயற்சி மேற்கொண்டனர்.  அப்போது போலீஸார் நடத்திய எதிர்த் தாக்குதலில் 5 பேர் சிக்கி கொண்டனர்.  7 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காவல் நிலையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.
    போலீஸாரிடம் சிக்கிய 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மாவோயிஸ்டுகள் என கண்டறியப்பட்டது. பின்னர் தப்பியோடிய 7 மாவோயிஸ்டுகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டதுடன், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
மஞ்சூர், தொட்டக்கம்பை, எடக்காடு, குந்தா பாலம், ஓணிகண்டி, பகுதிகளில் தாற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸாருடன் நக்ஸல் தடுப்பு அதிரடிப் படையினரும் சேர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.  டிஎஸ்பிக்கள் சங்கு (ஊட்டி), முத்தமிழ் (குன்னூர்), இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், விநாயகம் ஆகியோர் தலைமையில் தனிக் குழுகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மஞ்சூர் கடைவீதிப் பகுதியிலும்,   அரசுப் பேருந்துகள், வாடகை வாகனங்களையும் போலீஸார் அதிரடியாக சோதனையிட்டபோது,  மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாகத் தகவல் பரவி, பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.  சோதனையின் முடிவில் தப்பியோடிய மாவோயிஸ்டுகள் அனைவரும் போலீஸாரால்
கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா நேரில் விசாரணை நடத்தினார்.
  அப்போதுதான்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடத்தப்பட்ட மாவோயிஸ்டுகள் ஊருவல்
ஒத்திகை என்பது தெரியவந்தது. அதன் பிறகுதான் போலீஸார் மத்தியில் நிம்மதி ஏற்பட்டது. ஒத்திகை நிகழ்வு என்றாலும்கூட, துரிதமாகச் செயல்பட்ட மஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார், போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com