மஞ்சூர் அருகே வனப் பகுதிகளில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாயம்: வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு

மஞ்சூர் அருகே  வனப் பகுதிகளில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளதால் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சூர் அருகே  வனப் பகுதிகளில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளதால் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மஞ்சூர் அருகே தமிழக- கேரள எல்லையை ஒட்டியுள்ளது கிண்ணக்கொரை கிராமம். இப் பகுதியைச் சுற்றிலும் இரு மாநிலங்களுக்கும் சொந்தமான அடர்ந்த காடுகள் ஏராளமாக உள்ளன. இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் நெல்லிக்காய், கடுக்காய் போன்ற மருத்துவக் குணம் நிறைந்த மரங்களுடன் வனவிலங்குகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், தமிழக- கேரளப் பகுதிகளில் நிகழாண்டு தொடக்கத்தில் இருந்தே மழை பெய்யவில்லை. இதனால், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்த வறட்சியின் தாக்கத்தால் மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து கருகியுள்ளன. வனப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டுள்ளதால் குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அதிகளவில் இடம் பெயர்ந்துள்ளன. 
மேலும், வறட்சியால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இப் பகுதிகளில் வறட்சியின் காரணமாக பெரிய அளவில் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. 
இந்நிலையில், நிகழாண்டு காட்டுத் தீ பரவலைத் தவிர்க்க இரு மாநில வனத் துறையினரும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைப் பகுதிகளைச் சுற்றிலும் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன. அத்துடன் வனப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடவும், கால்நடை மேய்ச்சலுக்கும் தடை விதித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்களில் அடுப்புகளை மூட்டி சமையல் செய்தல் உள்ளிட்டவைகளாலும் காட்டுத் தீ பரவ வாய்ப்புள்ளது.
இதனால் வேட்டை மற்றும் தீத் தடுப்பு காவலர்கள், வனப் பகுதிகளை ஒட்டிய சாலை  ஓரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், குந்தா வனச்சரகர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் வனத் துறையினர் வனப் பகுதியை சுற்றிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com