பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

நீலகிரியில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள்  வலியுறுத்தியுள்ளனர். 

நீலகிரியில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள்  வலியுறுத்தியுள்ளனர். 
 நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தேயிலை, மலைக் காய்கறி விளைவிக்கப்படுகிறது. 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதனை நம்பியே உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மாவட்டத்தின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அதிக பனிப்பொழிவு, மழை அதிகம் பெய்வது போன்ற காரணங்களால் மலைத் தோட்ட காய்கறி, தேயிலை விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது.
 மத்திய அரசின் தொழில் வர்த்தகத் துறையின் மூலம் ரப்பர், தேயிலை, காபி, குறு மிளகு போன்றவற்றுக்கு முன்னோடி வருவாய் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. சமவெளிப் பகுதிகளில் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் உள்ளது. ஆனால், நீலகிரியில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
 2016-ஆம் ஆண்டு வறட்சியின் காரணமாக நீராதாரங்கள் வறண்டதாலும், 52 சதவீதம் அளவுக்கு மழை குறைவாக பெய்ததாலும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அப்போது, வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறையினர் மலைக் காய்கறி விவசாயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, மத்திய அரசின் ஆய்வு குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பித்தனர். ஆனால், நீலகிரியின் பிரதான தொழிலான பசுந்தேயிலை பாதிப்புக்கு எவ்வித ஆய்வும் செய்யப்படவில்லை.
 இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோத்தகிரி, குன்னூரில் மட்டும் 18 ஆயிரம் ஏக்கர் வரை பசுந்தேயிலைச் செடிகள் கருகியுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தோட்டங்களில் தேயிலைப் பறிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நீலகிரி விவசாயிகளை இணைக்க தோட்டக் கலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com