சமுதாய வளைகாப்பு: 250 கர்ப்பிணிகளுக்கு மங்கலப் பொருள்கள் வழங்கல்

உதகையில் உள்ள இளம்படகர் சங்கக் கட்டட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்

உதகையில் உள்ள இளம்படகர் சங்கக் கட்டட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் 250 கர்ப்பிணிகளுக்கு மங்கலப் பொருள்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்காகவும், வாழ்வாதாரம் உயரவும் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்துள்ளது.
 கர்ப்பிணிகள், தாங்கள் கர்ப்பம்  என்பதை உறுதி செய்தவுடன் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொண்டு மாதந்தோறும் தவறாமல் எடையை சரிபார்த்துக் கொண்டு, தடுப்பூசி மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அங்கன்வாடி மையத்தில் தரப்படும் சத்து மாவு உடல் நலத்துக்கும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாகும். எனவே, சத்து மாவைத் தவறாது வாங்கி உண்ண வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக கர்ப்பிணிகளின் இறப்பு, ரத்த சோகை, சிசு மரணம், எடை குறைவான குழந்தை பிறத்தல் ஆகியவை ஏற்படாமல் நல்ல முறையில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.
 அண்மைக்காலமாக  வீட்டிலேயே இணையதளத்தைப் பார்த்து பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்யாமல் அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ பிரசவம் பார்த்தால்தான் தாயும், சேயும் நலமுடன் இருக்க முடியும். மேலும், குழந்தை பிறந்தவுடன் தாயும், சேயும் ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்க குழந்தைப் பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. அத்துடன், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதி உதவித் தொகையாக ரூ. 18,000 வழங்கப்படுகிறது என்றார். 
தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு மங்கலப் பொருள்களையும், 7 வகையான உணவுகளையும் வழங்கி, சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், உதகை கோட்டாட்சியர் சுரேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கீதா, உதகை நகர்மன்றப் பொறியாளர் ரவி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com