மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டம்

திருப்பூர் மாநகர், அவிநாசி, காங்கயம் ஒன்றிய பகுதிகளில் மதுக்கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர், அவிநாசி, காங்கயம் ஒன்றிய பகுதிகளில் மதுக்கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி. நகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி ஏற்கெனவே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடையை அகற்ற வருவாய்த் துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
ஆனால், வாக்குறுதி அளிக்கப்பட்ட அவகாசத்தைத் தாண்டியும் கடை அகற்றப்படாத காரணத்தால், 12-ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில், அப்பகுதி மக்கள் கடை முன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 15 வேலம்பாளையம் போலீஸார், வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதேபோல், கல்லூரி சாலையில் கொங்கணகிரி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, ஏற்கெனவே ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால், வெள்ளிக்கிழமை மீண்டும் அப்பகுதி மக்கள் கடை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து முற்றுகை கைவிடப்பட்டது.
கந்தம்பாளையத்தில்...:  அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி கந்தம்பாளையத்தில் புதிதாக அரசு மதுக் கடை அமைக்கப்பட்டு விற்பனை தொடங்க இருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுக்கடை முன் திரண்டு போராட்டத்தில ஈடுபட்டனர்.
 சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பொதுமக்கள் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்படும். மேலும், மதுக்கடை திறப்பது ஒத்திவைக்கப்படும் எனக் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ஒட்டப்பாளையத்தில்...: காங்கயம் ஒன்றியம், படியூர் அருகே ஒட்டப்பாளையத்தில் புதிய மதுக்கடை திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த ஒட்டபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பிட்ட கடை முன்பு பாடை கட்டி வந்து வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காங்கயம் வட்டாட்சியர் தே.வேங்கடலட்சுமி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com