திருப்பூரில் தங்கியுள்ள நைஜீரியர்களை  கண்காணிக்க வலியுறுத்தல்

திருப்பூரில் தங்கியுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களை முறையாகக் கண்காணிக்கவும், வரைமுறை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை

திருப்பூரில் தங்கியுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களை முறையாகக் கண்காணிக்கவும், வரைமுறை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து முதல்வர் தனிப் பிரிவில் ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுந்தரபாண்டியன் அளித்த புகார் மனு விவரம்:  
திருப்பூர் மாநகரம் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால்,  திருப்பூருக்கு வரும் நைஜீரியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. திருப்பூரிலேயே நைஜீரியர்கள் தங்கி, தொழில் செய்து வருகின்றனர். மாணவர்கள் என்ற பெயரில் விசா எடுத்து  இங்கு வரும் அவர்கள் முறைகேடாகத் தங்கி தொழில் செய்து வருகின்றனர். 
மேலும், போதைப் பொருள் கடத்தல்,  தங்கியிருக்கும் வாடகை வீட்டில் மதுக் கூடம் நடத்துவது,  பாலியல் தொழில் உள்பட இன்னும் பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 திருப்பூர் பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனங்களில் வலம் வரும் அவர்களுக்கு, சர்வதேச ஓட்டுநர் உரிமம் இல்லை. சாலை விதிகளையும் அவர்கள் மதிப்பதில்லை. காவல் துறை அவர்களைக் கண்டு கொள்வதில்லை.
   மாநகரில் பல்வேறு பிரச்னைகளில் நைஜீரியர்கள் ஈடுபட்டு,  அடிக்கடி காவல் நிலையத்துக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு காவல் நிலையத்துக்குச் சென்றபோது,  காவல் உதவி ஆய்வாளரை இவர்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணமான நைஜீரியர்களை  காவல் துறை உடனடியாகக் கண்காணித்து,  முறையான ஆவணங்கள் வைத்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து,  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  நைஜீரியர்கள் வைத்துள்ள வாகனங்கள் யாருடைவை என்பது குறித்தும் ஆய்வு செய்து,  அதை வழங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com