பீன்ஸ் விலை வீழ்ச்சி: நெருக்கடியில் மலைவாழ் மக்கள்

பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து வருவதையடுத்து மலைவாழ் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
பீன்ஸ் விலை வீழ்ச்சி: நெருக்கடியில் மலைவாழ் மக்கள்

பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து வருவதையடுத்து மலைவாழ் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
உடுமலை அருகே, தமிழக - கேரள எல்லையில் உள்ள அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி ஆகிய 3 மலைக் கிராமங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இதை நம்பி சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், 90 நாள்களில் விளையக் கூடிய பீன்ஸ் பயிரை கடந்த டிசம்பர் மாதம் மலைவாழ் மக்கள் பயிரிட்டிருந்தனர். குத்து பீன்ஸ், கொடி பீன்ஸ் என இரண்டு வகையான பீன்ஸ்கள் பயிரிடப்பட்டிருந்தன.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அவை அறுவடைக்கு வந்தன. இதையடுத்து, மதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட சந்தைகளில் பீன்ஸ் கிலோவுக்கு ரூ. 80 முதல் ரூ. 90 வரை விலை கிடைத்து வந்ததால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக திடீரென பீன்ஸ் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது, கிலோ ரூ. 40 முதல் 50 வரை மட்டுமே விலைபோவதால் மலைவாழ் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், அவர்களில் ஒரு சிலர் சந்தைகளுக்கு பீன்ஸை கொண்டு செல்லாமல் அதில்  உள்ள முத்துகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, காய வைத்துப் பக்குவப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் காய வைத்த பீன்ஸ் கிலோ ரூ. 70-க்கு விலை போவது குறிப்பிட த்தக்கது. ஆனாலும், இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதுடன், காலதாமதம் ஏற்படுவதால் மலைவாழ் மக்களுக்கு உடனடியாகப் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தளிஞ்சி, மஞ்சம்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது:
பீன்ஸ் பயிரை எங்கள் பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சின்னாறு வனப் பகுதிக்கு டிராக்டரில் கொண்டு வருகிறோம். பின்னர் அங்கிருந்து வாடகை வேனில்  மதுரை, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல் ஆகிய சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகிறது.
ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் செலவு செய்த நிலையில் பீன்ஸ் கிலோ ரூ. 40 மட்டுமே விற்பனையாவது எங்களுக்கு கட்டுபடியாகவில்லை. அதிக நஷ்டம் ஏற்படுகிறது. பீன்ஸில் உள்ள முத்துகளைப் பிரித்து எடுத்துக் காய வைத்து விற்பனை செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மேலும், எங்களுக்குப் பணம் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, உரிய நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com