ஜி.எஸ்.டி. மூலமாக உலகிற்கு ஜனநாயகத்தை உணர்த்தியுள்ளோம்: ஜெயந்த் சின்ஹா

ஜனநாயகம் என்றால் என்ன என்பதை ஜி.எஸ்.டி. மூலமாக  உலக அரங்கிற்கு இந்தியா உணர்த்தியுள்ளதாக, மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

ஜனநாயகம் என்றால் என்ன என்பதை ஜி.எஸ்.டி. மூலமாக  உலக அரங்கிற்கு இந்தியா உணர்த்தியுள்ளதாக, மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,  மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா,  மத்திய ஜி.எஸ்.டி. ஆணையர் (கோவை) என்.ஜே.குமரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு தொழில் துறையினரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில்  அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்கீழ் நாடு முழுவதும் தற்போது 85 லட்சம் உற்பத்தி நிறுவனங்கள் வந்துள்ளன.  
ஜி.எஸ்.டி.யின் கீழ் சேவை நிறுவனங்கள்,  வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களைக் கொண்டு வருவதிலும்,  ஏற்கெனவே வரி விதிப்பின் கீழ் பதிவு செய்துள்ளவர்களுக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை மறுக்க இயலாது.
மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் நாட்டிலுள்ள அனைத்து தொழில் உற்பத்தி மையங்களுக்கும் நேரில் சென்று உற்பத்தியாளர்களைச் சந்தித்து, ஜி.எஸ்.டி. தொடர்பான சந்தேகங்கள், நடைமுறைச் சிக்கல்களைக்  கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இதுவரை, ஜி.எஸ்.டி. குறித்த சந்தேகங்கள், வரி விதிப்புகள், ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரியினங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  மேற்கொண்டு எழும் சந்தேகங்களுக்கு தீர்வு பெற, அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை மையத்தை அணுகலாம்.  
திருப்பூர் உற்பத்தியாளர்களின் மிக முக்கிய கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம். அவை மத்திய நிதித் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
ஜி.எஸ்.டி.யில் வரி செலுத்தும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. நாட்டின் வருவாயை உயர்த்தவும்,  நாட்டின் வளர்ச்சிக்கும்  ஜி.எஸ்.டி. அவசியமானது.  ஜி.எஸ்.டி. குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
ஜனநாயகம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை உலக அரங்கிற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலமாக நாம் உணர்த்தியுள்ளோம். மாநில அரசுகளுடன் இணைந்து  ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நடவடிக்கையையே ஜி.எஸ்.டி.  மூலமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  எனவே, நாட்டு மக்கள் அனைவரும் இதைப் புரிந்து கொண்டு ஜி.எஸ்.டி.க்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில்,  திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள்,  உற்பத்தியாளர்கள்,  சிறு,  குறு மற்றும் நடுத்தர நிறுவனத்தினர், வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்,   இந்திய ஏற்றுமதி  அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.சக்திவேல்,  மத்திய ஜி.எஸ்.டி. துணை ஆணையர் (கோவை) ஏ.கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com