பழைய தீயணைப்பு நிலையத்தை ஆக்கிரமித்த தொழிலாளர்கள் வெளியேற்றம்

வெள்ளக்கோவில் பழைய தீயணைப்பு நிலையத்தை ஆக்கிரமித்த தொழிலாளர்களை போலீஸார் அதிரடியாக வியாழக்கிழமை வெளியேற்றினர்.

வெள்ளக்கோவில் பழைய தீயணைப்பு நிலையத்தை ஆக்கிரமித்த தொழிலாளர்களை போலீஸார் அதிரடியாக வியாழக்கிழமை வெளியேற்றினர்.
காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை செலுத்தி தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த வாரம் தீயணைப்பு நிலையம் சொந்தக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
முறைப்படி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது பழைய தீயணைப்பு நிலையம் காலியாக உள்ளது. சுற்றுச்சுவருக்கு கதவு கிடையாது.
இந்நிலையில் திடீரென அண்ணா தொழிற்சங்கம் என்கிற பெயர் பலகையை வைத்து சுமை தூக்கும் (பச்சை துண்டு) தொழிலாளர்கள், பழைய தீயணைப்பு நிலைய கட்டடத்தின் உள்ளே புகுந்து தங்களுடைய பாரம் இழுக்கும் கை வண்டிகளை அங்கு நிறுத்தினர். இச்சங்கம் அதிமுகவின் ஒரு பிரிவைச் சார்ந்ததாகும்.
இதனையறிந்த நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பெயர் பலகை, கைவண்டிகளை அகற்றி தொழிலாளர்களையும் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து, தொழிலாளர்கள் தரப்பில் கேட்ட போது, எங்களுடைய சங்கத்துக்கு இடம் கிடையாது. சம்பந்தப்பட்ட கட்டடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானதாக இருந்துள்ளது. கட்சியின் உள்ளூர் பிரமுகர் சொன்னதால் அங்கு சென்றோம் என்றனர்.
நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, இக்குறிப்பிட்ட சுமார் 8 சென்ட் பரப்பளவுள்ள கட்டடத்துடன் கூடிய இடம் நகராட்சிக்குச் சொந்தமானதாகும். இதில் அத்துமீறி நுழைவது சட்டப்படி குற்றாகும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுச் சொத்து ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com