தனியார் பள்ளி மீது புகார் தெரிவித்து தந்தையர் இருவர் போராட்டம்

தனியார் பள்ளி மீது புகார் தெரிவித்து திருப்பூரில் தந்தையர் இருவர் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளி மீது புகார் தெரிவித்து திருப்பூரில் தந்தையர் இருவர் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,  அங்கேரிபாளையம் சாலையில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக்  கூட்டத்தில் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்துக்கு 2017-18 -ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்தப் பள்ளியில் யு.கே.ஜி.  படிக்கும் மாணவரின் தந்தையான அங்கேரிபாளையத்தைத் சேர்ந்த பழனிகுமாரும்,  வெங்கமேடு பகுதியை சேர்ந்த இரு மாணவிகளின் தந்தையான செல்வமும்  பள்ளிக்குச் சென்றனர்.ஆனால் பள்ளி வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அனுப்பர்பாளையம் போலீஸார் அவர்கள் இருவரையும்  தடுத்து நிறுத்தினர்.  இதனால் பழனிகுமாரும் செல்வமும்  அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இருவரும் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பழனிகுமார் கூறியதாவது:
 பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த என்னை  போலீஸார்  அனுமதிக்கவில்லை.  ஏற்கெனவே பெற்றோர்- ஆசிரியர் சங்க உறுப்பினராகப் போட்டியிட பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பம்  கேட்டபோதும் அவர்கள் மறுத்து விட்டனர்.
தற்போது பள்ளி  வளாகத்தில் மாநகராட்சி அனுமதி இல்லாமல்  புதிய கட்டடப் பணி நடைபெறுவதாக நான்  மாநகராட்சிக்கும் முதன்மை கல்வி அலுவலருக்கும் ஏற்கெனவே புகார் செய்துள்ளேன். அது தொடர்பாக மாநகராட்சி சார்பிலும் முதன்மை கல்வி அலுவலர் தரப்பிலும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே என்னை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் பள்ளி நிர்வாகம் தடுத்துள்ளது என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட செல்வம் கூறியதாவது:
எனது மகள்களுக்கு நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக அரசு நிர்ணயித்த தொகையான ரூ. 15,000 மற்றும் ரூ. 7,110 -க்கான வரைவோலைகளை எடுத்து பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினேன்.  ஆனால் அவர்கள் வரைவோலையை ஏற்க மறுத்து விட்டனர். அதுதொடர்பாக மாவட்ட முதன்மை  கல்வி அலுவலரிடம் முறையிட்டேன்.  அவர்கள் கூறியும் வரைவோலையை பெற்றுக்கொள்ள பள்ளி நிர்வாகம் மறுத்ததால், அது தொடர்பான விபரங்களை கல்வி  கட்டண நிர்ணயக் குழுவுக்கு அனுப்பியுள்ளேன்.  இதுவரை 2  மகள்களும் இதுவரை கல்விக் கட்டணம் செலுத்தாமலேயே பள்ளிக்கு செல்கின்றனர். நான் நியாயத்திற்காக  போராடுவதால் பள்ளி நிர்வாகம் என்னைப் பழி வாங்குகிறது என்றார்.
போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர். இச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com