காங்கயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை  சாலை மறியல் ஈடுபட்டனர்.

காங்கயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை  சாலை மறியல் ஈடுபட்டனர்.
 காங்கயம் திருவள்ளுவர் நகர், கார்த்திகை நகர், எம்பிஎம் நகர், அய்யாவு செட்டியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளுக்கு கடந்த 3 மாதங்களாக சரிவர தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது, நகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தவிர அய்யாவு செட்டியார் வீதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்தும் அவ்வப்போது குடிநீர் விநியோகம் செய்து வந்தனர்.
 இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு இந்த ஆழ்துளைக் கிணற்று  மோட்டார் பழுதடைந்துவிட்டது. இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன், இந்த ஆழ்துளைக் கிணறு தனக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறி, மோட்டார் பொருத்த  நீதிமன்றத்தில் தடையாணை உத்தரவு வாங்கியதாகத் தெரிகிறது. இதனால், பழுது நீக்கப்பட்ட மோட்டாரை ஆழ்துளைக் கிணற்றில் பொருத்த முடியாமல்போனது. இதன் காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை
காலை திருப்பூர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம், காங்கயம் போலீஸார், நகராட்சிப் பொறியாளர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 ஆனாலும், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து, நகராட்சி ஆணையர் எஸ்.எஸ்.சுரேஷ்குமார், வட்டாட்சியர் தே.வேங்கடலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினர். அப்போது, ஆழ்துளைக் கிணறு இருக்கும் இடம், தனியாருக்குச் சொந்தமான இடமாக இருந்தால், வேறு இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மோட்டார் பொருத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com