விளைச்சல் குறைவு: வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை

விளைச்சல் குறைந்துபோனதால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து, கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் குறைந்துபோனதால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து, கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், குண்டடம், காங்கயம், உடுமலை, பெரியபட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. விவசாயிகள், சின்ன வெங்காயத்தை பணப் பயிராக கருதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேனி, காவிரி டெல்டா பகுதிகளில் கூட, விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.
 பருவமழை பொய்த்துப் போனதால், சின்ன வெங்காயம் பயிரிடும் பரப்பளவும் கணிசமாகக் குறைந்துபோனது. தற்போது, 10 சதவீதம் பரப்பளவில் கூட சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படவில்லை. இதனால், சின்ன வெங்காயம் உற்பத்தி கணிசமாக குறைந்துவிட்டது.
 இதன் காரணமாக, சின்ன வெங்காய விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ. 40 வீதம் கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அதே சமயம்,  இருப்பு வைக்கப்பட்டிருந்த பழைய வெங்காயம் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
 இந்த விலை உயர்வு குறித்து விவசாயிகள் கூறியதாவது:
 தண்ணீர் இல்லாமல் சின்ன வெங்காயம் விளைச்சல் கணிசமாகக் குறைந்துவிட்டது.
அதனால், விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது. தற்போது, மைசூர் வெங்காய வரத்துத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சின்ன வெங்காய விலை தற்போதைக்கு குறையாது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com