தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது மார்க்கெட் வீதியில் போக்குவரத்து நிறுத்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர்- புது மார்க்கெட் வீதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர்- புது மார்க்கெட் வீதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வரும் சனிக்கிழமை தொடங்கி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்றும், இதனால், வெள்ளிக்கிழமை முதல் கடைவீதிகளில் தீபாவளி விற்பனைஅதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாநகரக் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குமரன் சாலை பகுதிகளில் மக்கள் தடையின்றி கடைகளுக்குச் செல்லவும், நெரிசல் ஏற்படாத வகையிலும், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகனங்களை நிறுத்துவதிலும் மாற்றம் செய்ய மாநகரக் காவல் துறை ஆலோசித்து வருகிறது.
தவிர, குமரன் சாலை, புது மார்க்கெட் வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கவும் பணிகள்முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் புது மார்க்கெட் வீதியில் பொது மக்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்து வரும் நாள்களில் திருப்பூர், புது மார்க்கெட் வீதியில் பொது மக்களின் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும் என்பதால், அவ்வழியாக பேருந்துகள் செல்ல இயலாத நிலை ஏற்படும். எனவே மக்களின் நலன் கருதியும், வணிகர்களின் நலன் கருதியும் பேருந்து இயக்கத்தில் வெள்ளிக்கிழமைமுதல் சிறு மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பழைய பேருந்து நிலையத்திலிருந்து புது மார்க்கெட் வீதி வழியாக வெளியேறும் அனைத்துப் பேருந்துகளும்,   பழைய பேருந்து நிலையத்தின் கிழக்குப் புற  வாயில் வழியாக வெளியேறி, பெருமாள் கோயில்,  காமராஜர் சாலை வழியாக மாநகராட்சி அலுவலகம் சென்று, வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com