நொய்யல் தூய்மைப் பணி கலாம் பிறந்த நாளில் நிறைவடைகிறது: வேலி அமைக்கவும், கரைகளில் மரம் நடவும் திட்டம்

நொய்யலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணியை  அப்துல் கலாம் பிறந்த நாளில் நிறைவு செய்து, இரு கரைகளிலும் மரக் கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நொய்யலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணியை  அப்துல் கலாம் பிறந்த நாளில் நிறைவு செய்து, இரு கரைகளிலும் மரக் கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழையால் திருப்பூர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது ஆற்றில் பெருமளவு குப்பைகள் சேர்ந்தன. எனவே, நொய்யலைத் தூய்மை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னலாடை மற்றும் தொழில் கூட்டமைப்பு இணைந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நொய்யல் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, கடந்த 4-ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன; பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஓரளவு  நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்  கலாம் பிறந்த நாளுக்குள் பணிகளை முடித்து, இரு கரைகளிலும் மரக் கன்றுகள் நட்டுப் பாதுகாத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஜீவ நதி நொய்யல் சீரமைப்புக் குழு செயலாளர் சண்முகராஜ் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம்,  திருப்பூர் பின்னலாடை மற்றும் தொழில் கூட்டமைப்பு இணைந்து தூய்மைப் பணி, திருப்பூர் குமரன் பிறந்த நாளான கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பணிகள் தொடர்ந்து நடைபெற்று, தற்போது நிறைவு நிலையை எட்டியுள்ளன.
திட்டமிட்டபடி வரும் 15-ஆம் தேதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளில் பணிகள் முடிக்கப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரைகளில் மரக் கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.  அன்றைய தினம் காலை நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நொய்யல் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போதுவரை,  600 டன் குப்பை மற்றும் கழிவுப் பொருள்கள் எடுக்கப்பட்டு, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மண் மற்றும் சிறு கற்களை ஆற்றின் இரு கரைகளிலும் கொட்டி பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு நாளும் மாநகராட்சிக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரங்களுடன் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக பின்னலாடை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் சார்பில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் பணிகள் முடிக்கப்பட்டவுடன், நொய்யல் ஆற்றைப் பாதுகாத்திடும் விதமாக, மாவட்ட நிர்வாக  அனுமதியுடன் இரு கரைகளிலும் வேலி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.முன்னதாக, நொய்யலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார். அப்போது ஆட்சியர் கூறுகையில்,  ""தற்பொழுது தூய்மைப்படுத்தப்பட்டுள்ள நொய்யல் பகுதியில்  மக்களும் வியாபார நிறுவனங்களும் குப்பைகள், கழிவுப் பொருள்களைப் போடாமல் பாதுகாக்க வேண்டும்.  அனைவரும் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றைப் பாதுகாத்திட வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com