திருப்பூர் - ஹெளரா இடையே பிரத்யேக "காட்டன் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை தொடக்கம்

பின்னலாடை சரக்குகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேக சரக்கு ரயில், "காட்டன் எக்ஸ்பிரஸ்' முதன்முறையாக திருப்பூரிலிருந்து மேற்குவங்கத்துக்கு வியாழக்கிழமை இயக்கப்பட்டது.

பின்னலாடை சரக்குகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேக சரக்கு ரயில், "காட்டன் எக்ஸ்பிரஸ்' முதன்முறையாக திருப்பூரிலிருந்து மேற்குவங்கத்துக்கு வியாழக்கிழமை இயக்கப்பட்டது.
பின்னலாடை உற்பத்தி நகரமான திருப்பூரில் இருந்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான சரக்குகள் நாள்தோறும் ரயில்கள் மற்றும் லாரிகளில் பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கப்பல்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதில், திருப்பூரிலிருந்து மேற்குவங்கத்துக்கு அதிக அளவில் சரக்குகள் ரயில் மற்றும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரயில்களில் தேவையான சரக்குகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்புவதில் சிக்கல் உள்ளது. தவிர,  ரயில்கள் பிற ஊர்களுக்குச் சென்று செல்வதும், லாரிகள் சாலை வழியாக மேற்குவங்கம் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படுவதால் சரக்குகளை உரிய நேரத்துக்கு அனுப்ப முடிவதில்லை.
மேலும் சரக்குகளை அனுப்ப அதிகப் பொருள் செலவும் தேவைப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதன்காரணமாக திருப்பூரில் இருந்து சரக்குகளை மொத்தமாக அனுப்ப சிறப்பு சரக்கு ரயில் வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் தொழில் துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருப்பூர் தொழில் துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதற்கட்டமாக திருப்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹெளராவுக்கு பின்னலாடை சரக்குகளை மட்டும் கொண்டு செல்லும் "காட்டன் எக்ஸ்பிரஸ்' எனும் சிறப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை இரவு இயக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் சனிக்கிழமை பகல் ஹெளராவைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரயில் சேவையை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் ஜி.சரவணன், வர்த்தகப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் தொழில் துறையினர் பங்கேற்றனர்.
காட்டன் எக்பிரஸ் ரயில் சேவை தொடக்கம் குறித்து திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:
தெற்கு ரயில்வே சார்பில் முதன்முறையாக திருப்பூரிலிருந்து சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முழுவதும் பின்னலாடை சரக்குகளை இந்த "காட்டன் எக்ஸ்பிரஸ்' ரயில் கொண்டு செல்கிறது. திருப்பூரிலிருந்து புறப்படும் ரயில் வேறு எங்கும் நிற்காது. இரு தினங்களில் நேராக ஹெளராவைச் சென்றடையும். இதனால் சரக்குகள் விரைவாக தேவையான இடங்களைச் சென்றடையும். தொழில் துறையினருக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக இது அமைந்துள்ளது. வாரம் ஒரு நாள் இந்த ரயிலை இயக்கத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்பும் தேவை, வரவேற்பைப் பொறுத்து வாரத்தில் இருநாள்கள் இயக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
திருப்பூர் ரயில் நிலைய வர்த்தகப் பிரிவு மேலாளர் முத்துகுமார் கூறியதாவது:
திருப்பூரிலிருந்து சரக்குகள் அனுப்புவதன் மூலமாக நாள்தோறும் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. இதனால் மாதம் ரூ. 30 லட்சம் வரை வருமானம் வந்தது. இந்த சிறப்பு சரக்கு ரயில் சேவையைப் பொறுத்தவரை, 20 பெட்டிகளில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 468 டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை திருப்பூரிலிருந்து கிலோவுக்கு ரூ. 8.50-க்கு சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன. சிறப்பு ரயில் சேவையில் கிலோவுக்கு ரூ. 5.50-க்கு சரக்குகள் அனுப்பப்படுகின்றன. இதனால் தொழில் துறையினருக்கு செலவினம் குறையும். ஒரு குவிண்டாலுக்கு ரூ. 530 வசூலிக்கப்படுகிறது. இதில் சரக்குகளை அனுப்பித் தொழில் துறையினர் பயன்பெறலாம். சரக்கு ரயில் இயக்கப்பட்டதன் மூலமாக ரயில்வேக்கு ரூ. 26 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
அதே நேரத்தில், சிறப்பு ரயில் இயக்கப்பட்டது மிகவும் பயனளிக்கும் விஷயம் என்று தொழில் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரக்குகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் கொண்டு செல்ல உதவும் என்றார் சைமா தலைவர் ஈஸ்வரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com