அவிநாசி அருகே கனமழையால் நிரம்பும்குளத்து மதகைத் திறக்கவும், எதிர்ப்புத் தெரிவித்தும் பொதுமக்கள் 3 இடங்களில் சாலை மறியல்

அவிநாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால், குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் மதகுகளைத் திறக்க விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவிநாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால், குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் மதகுகளைத் திறக்க விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. தாமரைக்குளம், சங்கமாங்குளம், நல்லாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. தாமாரைக் குளம் பகுதி அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகள், மங்கலம் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்கள், மழை நீடித்தால் குடியிருப்புகளுக்குள் மேலும் மழை வெள்ளம் புகுந்து, பொருள்சேதம், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தாமரைக்குளத்தின் மதகுப் பாதையைத் திறந்துவிட வேண்டும் எனக் கோரி அவிநாசி-கோவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல், மங்கலம் சாலைப் பகுதி மக்கள் அவிநாசி-மங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தாமரைக்குளம் மதகுப் பகுதியை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், காசிகவுண்டன்புதூர் பிரிவில் தாமரைக்குளம் மதகைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அத்திகடவு-அவிநாசி திட்டப் போராட்டக் குழுவினர், விவசாயிகள் அங்கு சென்று மதகைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த தாமரைக்குளம் தற்போது நிரம்பியுள்ளது. நிலத்தடிநீர் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்தக் குளம் நிரம்பிய பிறகு உபரிநீர் ஆட்டையாம்பாளையத்தில் நீர்வழித் தடத்தில் உள்ள இரண்டு மதகுகளின் வழியாக நல்லாற்றில் சென்று விடும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறி, மதகைத் திறப்பதற்காக வரவழைக்கப்பட்ட பொக்கலைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே, மதகை திறந்துவிட்டால் காசிகவுண்டன்பாளையம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் அவிநாசி- ஈரோடு- கோவை ஆறுவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தாமரைக்குளத்துக்கு அதிக அளவு தண்ணீர் வரும்போது திறந்துவிட ஏதுவாக, மூடித்திறக்கும் வசதியுள்ள ஷட்டர் உடனடியாக அமைக்கப்படும். மேலும், ஆட்டையாம்பாளையம் அருகே தாமரைக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையைத் தடுத்து, மழைநீரை நல்லாற்றின் வழியாக திருப்பிவிடுப்படும் எனத் தெரிவித்தனர். அதையடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டன.
சேவூர் அருகே சாலை மறியல்... சேவூர் அருகே அசநல்லிபாளையம் குளம் நிரம்பியதால்,, அப்பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிடர் காலனி பகுதி மக்கள் செல்லும் சாலையில் உள்ள தரைமட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அப்பகுதி மக்கள் 3 நாள்களாகத் தவித்து வருகின்றனர். இதனால், அசநல்லிபாளையம் குளத்தின் மதகைத் திறக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். மதகைத் திறந்து விடாததால், அப்பகுதி மக்கள் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வருவாயத் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, மீண்டும் மழை பெய்தால் உடனடியாக மதகு திறக்கப்படும். மழை பெய்யவில்லை எனில் ஞாயிற்றுக்கிழமை காலை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com