செவிலியர் கண்காணிப்பாளர் கொலை வழக்கு: உறவினர் கைது: 34 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

திருப்பூரில் அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸார் கைது

திருப்பூரில் அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி. லே-அவுட்டை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மனைவி சாந்தி (54). அவிநாசி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் திருமணமாகி சென்று விட, கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த சாந்தி, கடந்த 6-ஆம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக சாந்தியின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில் சாந்தியின் மாமா மகனான திருப்பூர், கல்லூரி சாலை, கண்ணகி நகரைச் சேர்ந்த முரளி (48) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட முரளிக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். வீட்டிலேயே 4 தையல் இயந்திரங்களை வைத்து, சிறிய அளவிலான பின்னலாடை ஜாப் ஒர்க் நிறுவனம் நடத்தி வருகிறார். போதுமான அளவில் வருமானம் இல்லாத காரணத்தால், கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தொழிலை விரிவுபடுத்த நினைத்த அவர், சாந்தியிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். சாந்தி கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை. இந்நிலையில், சாந்தியின் வீட்டுக்கு கடந்த 5-ஆம் தேதி மாலை சென்று பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முரளி, அரிவாளால் சாந்தியை வெட்டிக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுத் தப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட முரளி, திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு சங்கிலியை அவர் அடகுக் கடையில் வைத்து பணம் பெற்றிருந்தார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com