வங்கிகளில் அக்.1- முதல் ஆதார் மையங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஆதார் மையங்கள் திறக்கப்படவுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஆதார் மையங்கள் திறக்கப்படவுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண்ணை குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண் உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குடன் டிசம்பர் இறுதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், இணைக்காதவர்களின் வங்கிக் கணக்குகள் 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முடக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான வங்கிக் கணக்குகளில் இதுவரை ஆதார் எண் இணைக்கப்படவில்லை.
இதனால், வங்கித் துறை மூலமாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து இதுகுறித்து பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆதாருக்குப் புகைப்படம் எடுக்காத பொதுமக்களுக்கு ஆதார் எண் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:
மத்திய அரசானது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, டிசம்பர் இறுதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். ஜனவரி முதல் தேதி முதல் ஆதார் எண் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.
இதையொட்டி, அக்டோபர் முதல் தேதி முதல் அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆதார் மையங்கள் திறக்கப்படவுள்ளன. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாக இந்த ஆதார் மையங்கள் செயல்படும்.
இதுவரை ஆதார் எண் எடுக்காத பொதுமக்கள் வங்கிக் கிளைகளில் தொடங்கப்படும் ஆதார் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடைசி நேர கூட்ட நெரிசல், கால விரயம் போன்றவற்றைத் தவிர்க்க ஆதார் எண் வைத்துள்ளவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு உள்ள கிளையில் மட்டுமே இந்த இணைப்பை செய்ய முடியும். ஆனால், ஆதாருக்கு எந்தக் கிளைகளுக்கும் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 334 வங்கிக் கிளைகள் உள்ளன. நவம்பர் இறுதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com