பின்னலாடைத் துறையின் பிரச்னைகள் மீது  தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: டீமா

பின்னலாடைத் துறையினரின் பிரச்னைகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னலாடைத் துறையினரின் பிரச்னைகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு "டீமா' தலைவர் எம்.பி.முத்துரத்தினம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜவுளித் துறையினர்  சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. திருப்பூர் தொழில் துறையினருக்கு உள்ள பிரச்னைகளை மாநில அரசிடம் எடுத்துக் கூற வாய்ப்பு வழங்க தயக்கம் காட்டப்படுகிறது. அண்டை மாநில அரசுகள் இத்தொழில் மீது காட்டும் அக்கறையைக் கூட தமிழக அரசு காட்டாமல் உள்ளது.
தொழில் தற்போதுள்ள மோசமான சூழலில் இ-வே ரசீது முறையை மத்திய அரசு திணிப்பது வேதனையளிக்கிறது. திருப்பூர் பின்னலாடைத் துறையைப் பொருத்த வரை, 10 கி.மீ. முதல் 40 கி.மீ. தொலைவுக்குள்  உள்ள பகுதிகளில் பின்னலாடை சார்ந்த உபதொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சிலர் வீடுகளில் குடிசைத் தொழிலாக உபதொழில்களைச் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் இ-வே ரசீது முறைக்குள் வருவது சாத்தியமில்லாதது.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் இ-வே ரசீது நடைமுறை கிடையாது. மக்களுக்கு நன்மைளிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே மாநில அரசுகள் வரவேற்பளிக்க வேண்டும். இ-வே ரசீது முறையை மாநில அரசு  முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அல்லது, 100 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தலாம்.
இதுபோன்ற பிரச்னைகளைக் கண்டறிந்து,  தீர்வுகளை ஏற்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. இதற்காக அரசு சார்பில் பின்னலாடை வர்த்தக மேம்பாட்டுக் குழு,  ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கீழ் அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு மூலமாக பின்னலாடை வர்த்தகம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும். 
இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதுவரை பின்னலாடைத் தொழில் பிற மாநிலங்களுக்குச் செல்வது தடுக்க இயலாததாகி விடும். எனவே, இவ்விகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து தொழில் துறையினர், தொழிலாளர் சங்கங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com