திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தில்லியில் இறந்தது எப்படி? உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தில்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தில்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர், மங்கலம் சாலை, பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி.செல்வமணி, சாய ஆலை உரிமையாளர். இவரது மனைவி கண்ணம்மாள் (எ) தனலட்சுமி. இவர்களது மூத்த மகன் சரத் பிரபு (24). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 
தொடர்ந்து, நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, தில்லியில் அரசால் நடத்தப்படும் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (யுசிஎம்எஸ்) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில்,  7 மாதங்களுக்கு முன்னர் சேர்ந்து படித்து வந்தார்.  இவர், தில்லி, தில்சாத் கார்டன் பகுதியில் கோவையைச் சேர்ந்த மருத்துவர் உள்பட சக தமிழ் மருத்துவர்களுடன் தங்கியிருந்தார். 
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் உறவினரின் உயிரிழப்புக்காக திருப்பூர் வந்து சென்றவர், பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு வீட்டுக்கு வரவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் தில்லியில் இருந்து, அவரது வீட்டில் உள்ள அனைவரிடமும் செல்லிடப்பேசியில் சரத்பிரபு பேசியுள்ளார். 
புதன்கிழமை காலை 7 மணியளவில், தில்லியில் சரத் பிரபுவுடன் தங்கியுள்ளதாகக் கூறப்படும் மருத்துவர் ஒருவர், சரத் பிரபுவின் குடும்பத்தினரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, சரத் பிரபு குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 
சிறிது நேரத்தில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாகவும், குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் எவ்வாறு, எதற்காக இறந்தார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 20 பேர் தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தகுதி அடிப்படையில் இடம் பெற்றவர்: எல்.கே.ஜி. முதல் 10-ஆம் வகுப்பு வரை உதகையில் படித்த சரத் பிரபு, நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பொதுத் தேர்வில் 1,187 மதிப்பெண்கள் பெற்ற அவர், தகுதி அடிப்படையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். 
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சூர் சென்று ஓர் ஆண்டாக நுழைவுத் தேர்வுக்குப் படித்து வெற்றி பெற்றார்.  பாண்டிச்சேரி ஜிப்மரில் எம்.எஸ். படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், அதை விடுத்து, அடுத்து வந்த கலந்தாய்வில் வாய்ப்பு பெற்று, தில்லி கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படிக்கச் சென்றார்.
அனைவரிடமும் இயல்பாகப் பழகும் குணம் கொண்ட அவர், திடீரென இறந்து விட்டதாகக் கிடைத்த தகவளும்,  சம்பவ இடத்திலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் ஊசிகள், மருந்து குப்பிகளும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
இதுகுறித்து மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் சித்தப்பா ஜெயகாந்தன் கூறுகையில், எங்களுக்கு தகவல் தெரிவித்த அரவிந்த் என்ற மருத்துவரைத் தொடர்புகொண்ட போது, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோதே, மருத்துவர்கள் சரத் பிரபுவை பரிசோதித்து விட்டு  அவர் இறந்து விட்டதாகக் கூறியதாகத் தெரிவித்தார். அங்கு என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரியவில்லை. தில்லி சென்றவர்கள் தகவல் தெரிவித்தால் மட்டுமே விவரம் தெரிய வரும் என்றார்.
உண்மை விசாரணை வேண்டும்:
இந்த விவகாரத்தைப் பொருத்த வரை, உடற்கூறாய்வுக்குப் பின்னரே முழு விவரம் தெரிய வரும். இவ்விஷயத்தில் உண்மைகளை வெளிப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் வலியுறுத்தலாக உள்ளது.
ஏற்கெனவே எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணன், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜுலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். தொடக்கத்தில், தில்லி போலீஸாரால் தற்கொலை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க முகாந்திரம் இல்லை என்பது பிறகு தெரியவந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com