உப்பாறு அணைக்குத் தண்ணீர் வழங்க கோரிக்கை

அமராவதி ஆற்றிலிருந்து வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை உப்பாறு அணைக்கு திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமராவதி ஆற்றிலிருந்து வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை உப்பாறு அணைக்கு திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலிருந்து பூளவாடி சாலையில் 12 ஆவது கிலோ மீட்டரில் உப்பாறு அணை அமைந்துள்ளது.  பரம்பிக்குளம்,  ஆழியாறு கசிவு நீரை சேமித்து வைப்பதற்காக 1968-ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் சுற்றுவட்டார 50 கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி  பெற்று வருகின்றன. 
அணை கட்டப்பட்ட  ஆரம்ப காலங்களில் பரம்பிக்குளம்,  ஆழியாறு பகுதிகளிலிருந்து கசிவு நீர் முறையாக கிடைத்ததால் அணை நீர் நிரம்பி காட்சியளித்ததுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரும் வெகுவாக உயர்ந்தது. இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் இருபோக சாகுபடி செய்து மகிழ்ச்சியாக இருந்தனர்.  அணையில் போதிய நீர் இருந்ததால் அணையைச் சுற்றிலும் பொதுப் பணித் துறை சார்பில் மா, தேக்கு, தென்னை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. மேலும், அணைக்கு அருகில் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு மீன் விற்பனையும் செய்யப்பட்டு வந்தது.
இதுதவிர, அணையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் விடுமுறை நாள்களில் அணைக்கு சென்று விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வந்தனர். தாராபுரம் பகுதி மக்களுக்கு இந்த அணை மட்டுமே சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வந்தது. 
இந்நிலையில், அணைக்குத் தண்ணீர் வழங்க பரம்பிக்குளம், ஆழியாறு பாசன விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இதன் காரணமாக அணைக்குத் தண்ணீர் வரத்து நின்றுபோனதுடன், பருவ மழையும் பொய்த்துப் போனது. இதனால், அணை நீரின்றி வறண்டு போனது.
இதனைத் தொடர்ந்து அணையின் நலன் கருதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பரம்பிக்குளம், ஆழியாறு தண்ணீர் உப்பாறு அணைக்கு கிடைக்கும் பொருட்டு பல கோடி ரூபாய் செலவில் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார். கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவுற்றும் அணைக்குத் தண்ணீர் வரவில்லை.
இதுகுறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஏ.காளிமுத்து கூறியதாவது: 
எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அணைக்குத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. அணையைச் சுற்றி இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை, மா, பலா மரங்கள் அழிந்து விட்டன. விவசாயத்தைக் கைவிட்டு அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை காற்றாலைக்கு விற்பனை செய்து விட்டனர்.  
அணையையும்,  பகுதி மக்களையும் காப்பாற்றக் கடைசி முயற்சியாக அமராவதி அணையிலிருந்து திறந்து விட்டு ஆற்றில் சென்று வீணாக கடலில் கலக்கும் நீரைஅமராவதி பிரதான கால்வாய் மூலம் நாட்டுக்கல்பாளையம் கடைமடை  ஷட்டர் பகுதிக்கு கொண்டு வந்து  உப்பாறு அணைக்குத் திருப்பி விடலாம். இதற்கு எதிர்ப்பு ஏதும் இருக்காது. இதன் மூலம் ஒரு வாரத்தில் உப்பாறு அணை நிரம்பும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com