திருப்பூரில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பை செயல்படுத்துவதில் சிக்கல்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு கடிதம்

காவிரி ஆற்றோரங்களில் செயல்படும் அனுமதியற்ற சாய ஆலைகளால் திருப்பூரில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையைச் செயல்படுத்துவதில்

காவிரி ஆற்றோரங்களில் செயல்படும் அனுமதியற்ற சாய ஆலைகளால் திருப்பூரில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையைச் செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜன் எழுதியுள்ள கடிதம்:
கடந்த 2011 ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் திருப்பூரில் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 200 கோடி வழங்கியதால் திருப்பூர் சாயத் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன.
சாயக் கழிவுநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் படி,  இந்தியாவில் முதல்முறையாக  சாயக் கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சி மூலமாக 98 சதவீதத் தண்ணீரை மீண்டும் பயன்படுத்தும் பூஜ்யநிலை சுத்திகரிப்பு முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் நாள்தோறும் மறுசுழற்சி மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கிய ரூ. 200 கோடி நிதி உதவியைக் கொண்டு பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை கூடிய விரைவில் முழுமையாக முடித்து செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, திருப்பூரில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில், காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் செயல்படும் ஆலைகளுக்கு துணிகள் சாயமிடுவதற்காக கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் இங்கு உலர்த்துவதற்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் திருப்பூர் சாய ஆலைகளுக்கு போதிய துணி வராமல் சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.
முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் சாய ஆலைகளுடன் போட்டி போட முடியாமல் திருப்பூரில் ஆலைகள் நசிவடைந்து வருவதால், பூஜ்ய நிலை சுத்திகரிப்பை செயல்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன. 
திருப்பூரில் உள்ள சாயத் தொழிற்சாலைகள் நலிவடையாமல் இருக்க, காவிரி ஆற்றங்கரைப் பகுதிகளில் அனுமதி இல்லாமல் செயல்படும் சாயத் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அனுமதியுடன் செயல்படும் சாய ஆலைகளில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செயல்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com