"கஜா புயல்': அரசின் நிவாரணப் பணிக்கு உழவர் உழைப்பாளர் கட்சி பாராட்டு

கஜா புயல் நிவாரணப் பணிகள் மேற்கொண்ட தமிழக அரசுக்கு உழவர் உழைப்பாளர் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

கஜா புயல் நிவாரணப் பணிகள் மேற்கொண்ட தமிழக அரசுக்கு உழவர் உழைப்பாளர் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து பல்லடத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  
தமிழகத்தில் கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இப்புயல் குறித்து உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டதோடல்லாமல் பாதிப்படையக்கூடிய இடங்களை வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து தகவல்களைச் சேகரித்து, அப்பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நிவாரண முகாம்கள் அமைத்திடவும் கஜா புயலில் இருந்து மக்களைக் காப்பாற்றிட துரித நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், ஊடகங்கள் ஆகியோருக்கும் எங்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம், தஞ்சையில் அறுவடைக்கு தயாரான நெல் வயல், தென்னை மரம், குலையுடன் கூடிய வாழை மரம், மணப்பாறை, மூலனூர் பகுதியில் கண்வலி கிழங்கு போன்றவையும் பலத்த சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் நிலத்துக்கே அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்து, பயிர்ச் சேத மதிப்பீடு செய்து, விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் உழவுத் தொழிலில் ஈடுபட முயற்சிப்பர். வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்கும் நிறுவனத்தினருக்கும், வர்த்தகர்களுக்கும் எளிய முறையில் வரி செலுத்த கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து சேவை நோக்கில் இருக்கும் வேளாண்மை தொழிலுக்கான சாதனங்கள், இயந்திரங்களுக்கும் வரி விலக்கு அளித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்காசோளம்,  கொப்பரை, சின்னவெங்காயம் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் மிகவும் குறைந்த விலைக்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 
வேளாண்மைத் தொழிலையும், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் வெளிச் சந்தையில் விலை வீழ்ச்சி அடையும் வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்திட வேண்டும். கெயில் குழாய்களை விவசாய விளை நிலங்களின் வழியாக கொண்டு செல்லாமல் சாலையோரம் அல்லது ரயில் பாதையோரம் குழாய் வழியாக கொண்டு செல்ல வேண்டும். அதேபோல, மின்கோபுர மின் பாதை அமைக்காமல் சாலையோரம் கேபிள் வழியாக மின் பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
இப்பேட்டியின்போது கட்சியின் மாநில துணைத் தலைவர் சின்னகாளிபாளையம் ஈஸ்வரன், வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சோமசுந்தரம், நிர்வாகிகள் வெங்கடாசலம், பூந்தோட்டம் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com