விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்குவதால் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும்: ஆட்சியர்

ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்குவதால் மண் வளம் பெற்று, தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் உணவு தானிய

ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்குவதால் மண் வளம் பெற்று, தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், ராமாயணசின்னஅள்ளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஏரியைச் செம்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவைத்த பிறகு அவர் கூறியது:
 தருமபுரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் மூலம் 562 ஏரிகள் தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு மண் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 69 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1.50 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். 1.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் இதனால் பயன்பெற உள்ளன.
 வண்டல் மண் விவசாய நிலங்களில் பயன்படுத்துவதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலத்துக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். நிகழாண்டில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.50 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வண்டல் மண் வழங்கும் திட்டத்தால் இலக்கை விட அதிக அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியாகும் என்றார்.
 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் எம். மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ஆறுமுகம், மாவட்டச் செயலர் எஸ். இளங்குமரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், மாவட்டச் செயலர் ஏ. சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஏரிக் கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com