சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்

அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 170 பெண்கள் உள்பட 207 பேர் கைது செய்யப்பட்டனர

அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 170 பெண்கள் உள்பட 207 பேர் கைது செய்யப்பட்டனர்.
 மறியல் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் மறியலைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சி. காவேரி, பொருளாளர் கே. ராஜா உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 தொடர்ந்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 170 பெண்கள் உள்பட 207 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை விவரம்:
 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பேசித் தீர்க்கப்படும் என அப்போதைய முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
 எனவே பிரதான கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், சட்டப்படியான குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 கிருஷ்ணகிரியில்...
 கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 200 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 ஊழிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடையாக ரூ.3 லட்சம், விலைவாசி உயர்வு ஏற்ப உணவு தயாரிப்பு செலவினம், மறைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி என்பன உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடத்தப்பட்டது.
 கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தேவராஜ், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், நிர்வாகிகள் மார்கண்டன், ராமதாஸ், தேன்மொழி, மதியழகன், தனலட்சுமி, வள்ளிப்பன், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக 158 பெண்கள் உட்பட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com