தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுமா?

தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க ஏதுவாக, முக்கிய வீதிகள், சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க ஏதுவாக, முக்கிய வீதிகள், சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தருமபுரி நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. மாவட்டத்தின் தலைநகரப் பகுதியில் சுமார் 68,000 பேருக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் முக்கியச் சாலைகளாக, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமதுஅலி கிளப் சாலை, திருப்பத்தூர் மற்றும் பென்னாகரம் சாலைகள், நான்குமுனை சாலைச் சந்திப்பு, குமாரசாமிபேட்டை, எஸ்வி சாலை உள்ளிட்டவை விளங்குகின்றன.
இவை தவிர, ராமாக்காள் ஏரி முதல் அரசு மருத்துவமனை வரையிலான நேதாஜி புறவழிச் சாலைகளில் எப்போதும் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும்.
இதேபோல, இங்குள்ள புறநகர்ப் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் ஆகிய இரு பேருந்து நிலையங்களிலும் தங்களது பல்வேறு பணிகளுக்காகவும், நகரில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு பொருள்கள் வாங்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் தருமபுரிக்கு வந்து செல்கின்றனர்.
நகரில் நான்குமுனை சாலை மற்றும் பெரியார் சிலை அருகிலும், பேருந்து நிலையத்திலும் மட்டுமே கண்காணிப்புப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பேருந்து நிலையத்தில் உள்ள கஹண்காணிப்புக் கேமராக்கள் பழுது ஏற்பட்டு பல மாதங்களாகின்றன.
நகரத்தில் முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் கண்காணிப்புக் கேமராக்கள் இதுவரை பொருத்தப்படவில்லை.
இதனால், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முடியாமல், அச்செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால், திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் எளிதில் தப்பிக்க இயலும்.
எனவே, தருமபுரி நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, அதனை கண்காணிக்க காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, குற்றச் செயல்களை எளிதில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தருமபுரி நகரப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ளது.
தருமபுரி நகரத்தில் முக்கியச் சாலைகள் உள்பட ராமாக்காள் ஏரி முதல் பாரதிபுரம் வரையும், அதேபோல, அரசு மருத்துவமனை சாலை முதல் வெண்ணாம்பட்டி வரை என நகரம் முழுவதும் சுமார் 35 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இவற்றுக்கு சுமார் ரூ.13 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கி, கேமராக்கள் கொள்முதல் செய்து அவற்றை பொருத்தி நகர காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com