தருமபுரி மாவட்டத்தில் 11,89,942 வாக்காளர்கள்: அக். 31 வரை பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய வசதி

தருமபுரி மாவட்டத்தில் 11,89,942 வாக்காளர்கள் உள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 11,89,942 வாக்காளர்கள் உள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக். 31ஆம் தேதி வரை புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கே. விவேகானந்தன் அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி வாக்காளர் விவரங்கள்: சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை (முறையே ஆண், பெண், இதரர் மற்றும் மொத்த எண்ணிக்கை)- பாலக்கோடு - 1,12,164- 1,07,467- 11- 2,19,642. பென்னாகரம்- 1,20,542- 1,12,296- 12- 2,32,850. தருமபுரி- 1,29,636, 1,26,707, 95- 2,56,438. பாப்பிரெட்டிப்பட்டி- 1,25,757- 1,23,906- 8- 2,49,671. அரூர் (தனி)- 1,17,013- 1,14,319- 9- 2,31,341.
மாவட்டத்தின் மொத்தம்- 6,05,112- 5,84,695- 135- 11,89,942. 
சுருக்க முறைத் திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கே. விவேகானந்தன் கூறியது:
வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் 796 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் அக். 31ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.
அக். 3ஆம் தேதி முதல் அக். 31ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கான மனு அளிக்கலாம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர் பணியில் இருப்பார். வரும் 2018 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் புதிய வாக்காளர் சேர்க்கைப் படிவங்களை வழங்கலாம்.
அக். 7 மற்றும் 21ஆம் தேதிகளில் (சனிக்கிழமைகள்) கிராம சபா மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் படித்தல் நடைபெறும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் வாக்காளர் சேர்க்கைப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அக். 8 மற்றும் 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் அதே வரையறுக்கப்பட்ட 796 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு சிறப்பு முகாம் நடைபெறும். 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், நீக்க விரும்புவோர், திருத்தம் செய்ய விரும்புவோர் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒரு படிவம் மட்டுமே வழங்கப்படும். மொத்தமாக யாருக்கும் வழங்கப்பட மாட்டாது. உரிய இணைப்புகளை தவறாது இணைக்க வேண்டும்.  மனுதாரரே கையெழுத்திட வேண்டும். படிவங்களைப் பூர்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். 
www.elections.tn.gov.in, www.nvsp.in ஆகிய இணையதளங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆய்வுக்குப் பிறகு வரும் 2018 ஜனவரி 5ஆம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் விவேகானந்தன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com