பரிசல் ஓட்டிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

பரிசல் ஓட்டிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரிசல் ஓட்டிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதையடுத்து, பரிசல் ஓட்டிகள் அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆற்றில் 15,000 கன அடி நீர்வரத்து வரை அளவுக்கேற்ப மாமரத்துக் கடவு, கோத்திக்கல், ஊட்டமலை ஆகிய மூன்று இடங்களில் இருந்து பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். பயணிகளுக்கு போதிய அளவு பாதுகாப்பு உடை வழங்க வேண்டும். மாமரத்துக் கடவு பரிசல் துறைக்கு அருகில் உள்ள கண்ணாடிக் கூண்டை திறக்க வேண்டும். பரிசல் ஓட்டிகளுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் சேதுலிங்கம், காவல்துணைக் கண்காணிப்பாளர் அன்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒகேனக்கல்லுக்கு சென்று பரிசல் ஓட்டிகளிடம் கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ராஜு, கிளைச் செயலர் மாரிமுத்து, பரிசல் ஓட்டிகள் சங்க நிர்வாகிகள் பிரபு, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், மாமரத்துக் கடவு பரிசல் துறையிலிருந்து சினி அருவி வரை மட்டும் பரிசல் இயக்க சனிக்கிழமை (செப்.16) அனுமதிக்கப்படும். ஏனைய கோரிக்கைகளை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதையடுத்து, தற்போது நீர்வரத்து சரிந்துள்ளதால், ஆற்றில் முழுமையாக பரிசல் இயக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும், குறிப்பிட்ட தொலைவு வரையில் மட்டும் இயக்கும் அனுமதி தங்களுக்கு பயனில்லை என பரிசல் ஓட்டிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து உடன்பாடு எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாமரத்துக் கடவு பரிசல் துறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com