அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: கேரள சமூக நீதித் துறை அமைச்சர் எஸ்.சைலஜா

நமது நாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் சிந்தனைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரம் மற்றும் சமூக நீதித் துறை அமைச்சர் எஸ்.சைலஜா குற்றஞ்சாட்டினார்.

நமது நாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் சிந்தனைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரம் மற்றும் சமூக நீதித் துறை அமைச்சர் எஸ்.சைலஜா குற்றஞ்சாட்டினார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு தருமபுரியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டையொட்டி வள்ளலார் திடலில் பொதுக்கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் அமிர்தம் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்ற கேரள அமைச்சர் எஸ்.சைலஜா பேசியது: சமூகத்தில் அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே ஜனநாயகமாகும். உணவு, உடை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவை அடிப்படை உரிமைகள் என சட்டம் சொல்கிறது. ஆனால், தற்போது அடிப்படை உரிமைகளுக்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும், மதவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், மதவாத சக்திகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த முற்போக்கு சிந்தனையாளர்களான கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கலபுர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கித் தோட்டாக்கள் இந்த சிந்தனைவாதிகளைக் கொன்றிருக்கலாம். ஆனால், அவர்களது சிந்தனைகளையும், கருத்துகளையும் கொல்ல முடியாது. புல்லட் ரயில், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது பிரதமர் மோடி செலுத்தும் கவனம் கூட விவசாயிகள் மீது செலுத்தவில்லை. ஆண்டொன்றுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என மத்திய அரசு சார்பில், நீதிமன்றத்தில் விவரம் தரப்பட்டுள்ளது. இது மோசமான நிலையாகும். ராஜஸ்தான் மாநிலத்தில், அண்மையில், விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக, அம் மாநில அரசு விவசாயிகளின் ரூ.500 கோடி கடனைத் தள்ளுபடி செய்து மேலும், அவர்களது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த பிரதமர், அதற்கான எவ்வித நடவடிக்ûயையயும் எடுக்கவில்லை. மாறாக, பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகளின் விலை நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இது, பிரதமருக்கு சாதாரண மக்களைக் காட்டிலும், பெரு முதலாளிகளின் மீதுதான் அதிக அக்கறை இருப்பதைக் காட்டுகிறது என்றார்.
கூட்டத்தில், அகில இந்திய துணைத் தலைவர்கள் சுபாசினி அலி, உ.வாசுகி, மாநில பொதுச் செயலர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொருளாளர் ஆர்.மல்லிகா ஆகியோர் பேசினர். மத்தியக் குழு உறுப்பினர்கள், கே.பாலபாரதி, வி.பிரமிளா, எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com