அரூர் அருகே  பாலியல் வன்கொடுமை: பிளஸ் 2 மாணவி சாவு; சாலை மறியல்

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார்.

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி  பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவி, தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது, அக் கிராமத்தைச் சேர்ந்த  இருவர் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
இதுகுறித்து கடந்த 6-ஆம் தேதி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22),  ரமேஷ் (22) ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். 
இதையடுத்து, தருமபுரியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சனிக்கிழமை மருத்துவமனையில் மாணவி உயிரிழந்தார். 
இதனிடையே, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும், இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஜி.புண்ணியகோடி, டிஎஸ்பி ஏ.சி.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் மெத்தனம்?
பாலியல் வன்கொடுமை குறித்து தமது பெற்றோருடன் கோட்டப்பட்டி காவல் நிலையத்துக்கு நவ.5-ஆம் தேதி புகார் அளிக்க சென்ற மாணவியை போலீஸார் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல் போலீஸார் மெத்தனமாக செயல்பட்டதாகவும், மருத்துவமனையில் மாணவியின் பாதிப்பு குறித்து வழிகாட்டல் இல்லாததால் சிகிச்சையில் குறைபாடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ 52 மணி நேரத்துக்குப் பிறகுதான் மாணவி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகக் கூட மருத்துவர்களிடம் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லையாம். இந்த சம்பவத்தில் மெத்தனமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com