டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் முடிவு

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் அமைக்கும் பணிக்கும் கட்டணங்கள் உயர்த்தப்படும் என போர்வெல் லாரி உரிமையாளர்கள்

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் அமைக்கும் பணிக்கும் கட்டணங்கள் உயர்த்தப்படும் என போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தருமபுரி,  கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத் தலைவர் பாரி கணேசன், செயலர் சேது ஆகியோர் கூறுகையில், 
 டீசல் விலை உயர்வு காரணமாக போர்வெல் அமைக்கும் தொழில் நாளுக்கு நாள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் தொழிலாளர்கள்,  லாரி உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும்.   டீசல் விலை உயர்வுகளை ஆண்டுக்கு இருமுறை அல்லது நான்கு முறைகள் உயர்த்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, டீசல் விலை உயர்வு காரணமாக, போர்வெல் அமைக்கும் பணிகளுக்கு 300 அடி வரையிலும் ரூ.75,  400 அடி வரையிலும் ரூ.80,  500 அடி வரையிலும் ரூ.85,  600 அடி வரையிலும் ரூ.95,  700 அடி வரையிலும் ரூ. 115 என ஒவ்வொரு 100 அடிக்கும் போர்வெல் அமைப்பதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த கட்டண உயர்வை செயல்படுத்த உள்ளோம். 
இனிவரும் காலங்களில் டீசல் விலை உயர்வு இருக்கும்போது போர்வெல் அமைக்கும் பணிகளுக்கும் கட்டண உயர்வு இருக்கும். எனவே, இந்த கட்டண உயர்வுக்கு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் எச்.கே.ராஜா, அரூர் ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com