கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ரூ.44.11 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.44.11 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம், விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் டாக்டர் டி.ராஜமனோகரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
தருமபுரி ஒன்றியம் ஏ.கொல்லஅள்ளி, வெள்ளோலை, சோலைக்கொட்டாய் ஆகிய கிராமங்களில் இத்திட்டங்களால் பயனடைந்தோரை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர்கூறியது: விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தில் கிராம சபை மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2011-12-ஆம் ஆண்டு முதல் இதுவரை 23 ஊராட்சிகளில் 1,150 பயனாளிகளுக்கு ரூ.4.23 கோடியில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 11,000 லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கறவைப் பசுக்கள் இதுவரை 2,535 கன்றுகள் ஈன்றுள்ளன.
விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இதுவரை 27,199 பயனாளிகளுக்கு ரூ.35.09 கோடியில் 1,08,796 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 2,33,984 ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன.
நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தில் கடந்த 2012-13-ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,010 பயனாளிகளுக்கு ரூ.3.97 கோடியில் 2,52,500 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் (நிர்வாகம்) வேடியப்பன், நோய் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com