'குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு'

குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வளர்ச்சிப் பணிகள், வறட்சி, வருவாய்த் துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சோ.மதுமதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 15-ஆம் தேதி குடிநீர் திட்டப் பணிகளுக்கென நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், வளர்ச்சித் துறை அலுவலர்கள் மக்களின் குடிநீர் தேவைக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டை விட நிகழாண்டில் ஆண்டு மழை மிகக் குறைவாக பெய்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்காக நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு குடிநீர்ப் பணிகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அந்தக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்தப் பணிகளை நிறைவேற்றி வருவதாக துறை அலுவலர்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தனர். பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
ஊரகப் பகுதிகளைப் பொருத்தமட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மின் மோட்டார்கள் பொருத்தி மக்களுக்கு குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்டு இன்னமும் முடிவுறாத வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்திடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி.மாலதி, வருவாய் கோட்டாட்சியர்கள், மா.ராஜசேகரன், ரா. கீர்த்தி பிரியதர்சினி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் க. சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com