காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் தொடர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் நோயினால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார்.
காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் தொடர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் நோயினால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார்.

 நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக கடந்த 20 நாட்களில் பள்ளி மாணவிகள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் காய்ச்சல் தடுப்பு, சிகிச்சை ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். வியாழக்கிழமை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியர், வெள்ளிக்கிழமை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஊசி போடும் அறை, பிரசவ வார்டு, ஆய்வகம், புறநோயாளிகள் பிரிவு, காய்ச்சல் உள்நேயாளிகள் பிரிவு, மருந்தகம், வெளி மற்றும் உள் நோயாளிகள் பதிவு செய்யும் இடம், அறுவை சிகிச்சைக்குபின் கவனிப்புப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனைக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிப்பதோடு, தேவையான மருந்து, மாத்திரைகளையும் தயார் நிலையில், போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com