மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை பெற வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை பெற வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
 நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் தின விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர் விழாவைத் தொடக்கி வைத்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் உடன் சேர்ந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
 விழாவில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் பேசியது:
 மாற்றுத் திறனாளிகளின் வாழ்கைத் தரம் மேம்பட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வீட்டைவிட்டு வெளியே வந்து சிகிச்சை பெறமுடியாத 6 வயதுவரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, நடமாடும் வாகனம் மூலம் அவர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீர் முகாமில் மனுக்கள் பெறப்பட்டு, அன்றைய தினமே நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இம் மாவட்டத்தில் இதுவரை 37,387 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவ மதிப்பீட்டின்படி, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது.
 தற்போது மத்திய அரசின் ஒருங்கிணைந்த நவீன தேசிய அடையாள அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக அவர்களின் விவரங்கள் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. மேலும், ஆதார் அட்டைக்கான முகாம்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் விரைவில் நடத்தப்படும். இவற்றில் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
 இதன்மூலம் அரசுகளின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றார்.
 இதையடுத்து, மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவை புரிந்த அமைப்புகளுக்கு ஆட்சியர் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார். மேலும், முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த நவீன தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற கலை நிகழ்சிகள் நடைபெற்றன.
 விழாவில் நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோ.ரமேஷ் குமார், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com