ஆண்டுதோறும் 3,000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது

ஆண்டுதோறும் 3,000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது என மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினர் காமராஜ் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் 3,000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது

ஆண்டுதோறும் 3,000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது என மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினர் காமராஜ் தெரிவித்தார்.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பசுமை இயக்கம், நாம் இயக்கம் சார்பில் தேசிய நீர்வழிச்சாலை விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாம் இயக்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் அமைப்புத் தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். நாம் இயக்க மாநிலப் பொருளாளர் முத்துசிவம் வரவேற்றார். நாம் இயக்கம் மாநிலத் தலைவர் பிரபுராஜா, மாநிலச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். பசுமை நாமக்கல் அமைப்புச் செயலர் தில்லை சிவக்குமார் விழாவை ஒருங்கிணைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினரும் நவாட் டெக் தலைவருமான காமராஜ் பேசியது:
தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டமானது, தமிழகத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் வரக்கூடிய சமவெளிக் கால்வாய் ஆகும். 900 கி.மீ நீளமுள்ள நீர்வழிப்பாதையும், நீர்த்தேக்கமும் ஆகும்.
இது தங்க நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பிரச்னை மிகவும் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது. வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நம்மிடம் தேவையை விட அதிகமாகவே தண்ணீர் உள்ளது. ஆண்டுதோறும் 3,000 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. நீர்வழிச் சாலையை ஏற்றுக்கொள்ளும் மக்கள் நதிநீர் இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நீர்வழிச் சாலை திட்டத்தின்படி அந்தந்த மாநில மக்களின் உபயோகத்துக்கு பின் இதர மாவட்டங்களுக்குத் தண்ணீர் எடுத்து கொள்ள முடியும்.
நீர்வழிச் சாலை என்பது சமவெளிக் கால்வாய். பிரம்மபுத்திரா, கங்கை, கிருஷ்ணா, காவிரி நதிகளின் வெள்ளப் பெருக்கினால் கிடைக்கும் தண்ணீர் சேமிக்கப்படுவதால் 4 மாதங்களுக்கு விவசாயத்திற்கும், ஆண்டுதோறும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தால் வறட்சியின் பிடியில் உள்ள தென் மாநிலங்களுக்கு 9 மாதங்களுக்கு விவசாயத்துக்கும், புனல் மின்சார தயாரிப்புக்கும், ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படுத்தலாம்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாகி வீணாகும் தண்ணீரை இதர மாநிலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், வெள்ளப் பெருக்கால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது. நீர்வழிச் சாலையால் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பு பெருகும். மின்சார உற்பத்தி அதிகரிக்கும். நீர்வழிச் சாலையில் கப்பல் போக்குவரத்தில் சரக்கு பரிமாற்றங்கள் மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீர்வழிச் சாலையை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சேலத்தில் வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி அனைவருக்கும் தண்ணீர் என்ற நோக்கில் மாநாடு நடத்த உள்ளோம். நாட்டில் உள்ள 111 ஆறுகளில் 5 ஆறுகள் நீர்வழிச் சாலைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறுகளையும் நீர்வழிச்சாலை திட்டத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைந்ததுபோல், நீர்வழிச் சாலை திட்டத்திலும் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com